கமல் 
சினிமா

இந்தியன்-2 படத்துக்கான கருவைக் கொடுத்த அரசியலுக்கு நன்றி: கமல்

இப்படத்தில் நடித்த விவேக், மனோபாலா போன்றவர்கள் தற்போது எங்களுடன் இல்லை என்பது வேதனை அளிக்கிறது.

யோகேஷ் குமார்

ஊழல் அதிகமானதால் தான் இந்தியன் தாத்தாவின் 2-ம் வருகைக்கு அர்த்தம் கிடைத்துள்ளது என கமல் பேசியுள்ளார்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து 1996-ல் வெளியான படம் ‘இந்தியன்’. இப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இதைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ‘இந்தியன்-2’ படம் உருவாகி உள்ளது. இப்படம் ஜூலை 12-ல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இப்படத்தில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, பிரியா பவானி ஷங்கர் போன்றோர் நடித்துள்ளனர். இசை - அனிருத். ஒளிப்பதிவு - ரவி வர்மன். இந்நிலையில் படக்குழுவினர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அதில் கமல் பேசியதாவது:

“2-ம் பாகம் என்ற டிரெண்ட் வருவதற்கு முன்பே நாங்கள் அதை பற்றி பேசியிருக்கோம். இந்தியன் படத்தின் டப்பிங்கின் போது 2-ம் பாகம் எடுக்கலாம் என இயக்குநர் ஷங்கரிடம் கூறினேன். இந்தியன்-2 படத்துக்கான கருவை எங்களுக்கு இன்றும் கொடுத்துக்கொண்டிருக்கும் அரசியலுக்கு நன்றி. ஏனென்றால் இந்த ஊழல் அதிகமானதால் தான் இந்தியன் தாத்தாவின் 2-ம் வருகைக்கு அர்த்தம் கிடைத்துள்ளது.

இப்படத்தில் நடித்த விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு போன்றவர்கள் தற்போது எங்களுடன் இல்லை என்பது வேதனை அளிக்கிறது. நானும், இயக்குநர் ஷங்கரும் மீண்டும் நினைத்தாலும் இதுபோன்ற படத்தை எடுக்க முடியாது என ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் கூறினார். ஆனால், எடுத்திருக்கிறோம். அதுதான் இந்தியன் - 3. இப்படம் பல சாதனைகளைப் படைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது”.