கோப்புப்படம் 
சினிமா

கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் தக் லைஃப் திரையிடப்படாது: கர்நாடக அமைச்சர்

கமல் ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதற்காக கர்நாடக திரைப்பட வர்த்தகச் சபை விதித்த காலக்கெடு மே 30 அன்று நிறைவடைந்தது.

கிழக்கு நியூஸ்

கன்னட சர்ச்சை தொடர்பாக கமல் ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால், அவருடைய தக் லைஃப் படம் கர்நாடகத்தில் திரையிடப்படாது என அம்மாநில அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவின்போது தமிழ் மொழியிலிருந்து கன்னட மொழி பிறந்ததாக கமல் ஹாசன் ஒரு கருத்தைப் பேசியிருந்தார். இதற்கு கர்நாடகத்தில் கட்சி வேறுபாடின்றி எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. இவ்விவகாரம் தொடர்பாக கமல் ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கோரப்பட்டது. இந்த சர்ச்சையில் தொடர்புடைய ஷிவ ராஜ்குமார், கமல் ஹாசனுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்தார். இருந்தபோதிலும், எதிர்ப்புக் குரல்கள் குறைந்தபாடில்லை.

இதனிடையே திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கமல் ஹாசன் அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது என்றார். சென்னையிலும் அடுத்தடுத்த செய்தியாளர்கள் சந்திப்பில் தவறு செய்தால், மன்னிப்பு கேட்பேன், இல்லையென்றால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றார்.

கமல் ஹாசன் மன்னிப்பு கேட்கவில்லையென்றால், அவருடைய தக் லைஃப் படம் கர்நாடகத்தில் திரையிடப்படாது என கர்நாடக திரைப்பட வர்த்தகச் சபை ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதற்கு ஆதரவான கருத்தையே கர்நாடகத்தின் கன்னட மற்றும் கலாசாரம் அமைச்சர் ஷிவராஜ் தெரிவித்துள்ளார்.

"கன்னடம், கன்னடர்கள், கர்நாடக மண் மற்றும் நிலத்துக்கு எதிராக சிறு விஷயத்தைக் கூட நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். கமல் ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும். அல்லது திரைப்படச் சபை ஏற்கெனவே முடிவு செய்தபடி, அவருடைய படம் தடையை எதிர்கொள்ள நேரிடும்.

கமல் ஹாசன் இரு நாள்களில் மன்னிப்பு கேட்காவிட்டால் அவருடைய படம் திரையிடப்படாது என்ற திரைப்பட வர்த்தகச் சபையின் நல்ல முடிவைப் பாராட்டுகிறேன்" என்றார் கர்நாடக அமைச்சர்.

கமல் ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால், படத்துக்குத் தடை விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு ஆம் என்றும் அமைச்சர் பதிலளித்திருக்கிறார். கமல் ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதற்காக கர்நாடக திரைப்பட வர்த்தகச் சபை விதித்த காலக்கெடு மே 30 அன்று நிறைவடைந்தது.