”உனையீந்த உலகுக்கொரு நன்றி, நமைச் சேர்ந்த இயலுக்கொரு நன்றி” என இளையராஜாவுக்காகப் பாடல் எழுதிக் கொண்டு வந்து பாடி கமல் ஹாசன் அசத்தினார்.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் சிம்பொனி இசைத்த சாதனை மனிதருக்குப் பாராட்டு என்ற தலைப்பில் விழா நடந்தது. அதில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல் ஹாசன் கலந்து கொண்டார். அப்போது அவர் “நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி” பாடலின் மெட்டில் இளையராஜாவுக்காக ஒரு பாடலை எழுதிக் கொண்டு வந்து பாடினார்.
நிகழ்வில் அவர் உரையின்போது:
"உயிரே உறவே தமிழே வணக்கம். மொத்தமாக சுருக்கமாக எல்லாரையும் வரவேற்க வேண்டும் என்றால் அரங்கத்திலும் மேடையிலும் வீற்றிருக்கும் இளையராஜா ரசிகர்களே, அனைவருக்கும் உங்களில் ஒருவனான நான் வரவேற்கிறேன். இது வரவேற்புரை அல்ல இருந்தாலும் எல்லாரையும் மறுபடியும் மறுபடியும் இந்த மாதிரி இசை கேட்பதற்கு வரவேற்க வேண்டும் போல் இருக்கிறது.
இளையராஜா இசை நம் கண் நனைந்த போது வெளியே மண்ணும் நனைய ஆரம்பித்திருக்கிறது என்ற செய்தி கேட்டேன். அதிக பிரசங்கம் செய்வது நன்றாக இருக்காது. அண்ணா இளையராஜாவுடன் நான் கடந்து வந்த இந்த 50 வருடங்களை ஒவ்வொரு வாக்கியமாக சொன்னால், இந்த விழா நேரம் போதாது. ஆனால் அவருக்காக நான் எழுதிக்கொண்டு வந்திருக்கிறேன். நல்ல வேளையாக இங்கு இசைக் கலைஞர்கள் எல்லாரும் போய்விட்டார்கள். சுதி சேரவில்லை என்றால் மன்னித்துவிடுங்கள்.
இளையராஜா ரசிகனாக இந்த விழாவுக்கு முதலில் நான் நன்றி சொல்ல வேண்டும். முதல்வர் அவர்களுக்கு பெயர் வைத்த அதே மாமனிதர்தான் அண்ணன் இளையராஜா அவர்களுக்கும் எனக்கும் பெயரை சூட்டினார். இந்த விழாவில் நான் பேசுவது எனக்கு எவ்வளவு பெருமையா இருக்கும் என்பது அண்ணன் இளையராஜாவுக்குத் தெரியும்.
”உனை ஈந்த உலகுக்கு ஒரு நன்றி. நமைச் சேர்த்த இயலுக்கும் நன்றி. மாறாத ரசிகன் சொல்லும் நன்றி நன்றி. மனம் கொண்ட உறவு சொல்லும் நன்றி நன்றி. உயிரே வாழ்! இசையே வாழ் தமிழே வாழ்!”
இவ்வாறு அவர் பேசினார்.
Ilaiyaraaja | Ilaiyaraaja 50 | Kamal Hassan |