மணி ரத்னம் - கமல் ஹாசனின் கூட்டணியில் கடந்த மாதம் வெளியான தக் லைஃப் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
நாயகன் படத்துக்குப் பிறகு மணி ரத்னம் மற்றும் கமல் ஹாசன் தக் லைஃப் படத்துக்காக மீண்டும் இணைந்தார்கள். சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், நாசர் உள்ளிட்டோர் படத்தில் நடித்துள்ளார்கள். படம் வெளியாவதற்கு முன் தக் லைஃப் மீது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஏ.ஆர். ரஹ்மானின் பாடல்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தன.
படம் வெளியாவதற்கு முன் மும்பையில் நடைபெற்ற விளம்பர நிகழ்ச்சியில் பேசிய கமல் ஹாசன், தக் லைஃப் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடி தளத்தில் வெளியாகும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது என்றார். இது திரைத் துறையை ஆரோக்கியமானதாக மாற்றும் என்றும் கமல் ஹாசன் தெரிவித்திருந்தார்.
காரணம், திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் 4 வார இடைவெளியில் ஓடிடி தளங்களில் வெளியாவது பெரும்பாலும் வழக்கமாக உள்ளது. 4 வார இடைவெளி என்பது மிகக் குறைவு என்பதால், திரையரங்குகளுக்கு வர நினைக்கும் சிலர் ஓடிடியில் பார்த்துக்கொள்ளலாம் என முடிவெடுத்துவிடுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
திரையரங்கம் மற்றும் மல்டி பிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் திரைப்படங்களை 8 வார இடைவெளியில் ஓடிடியில் வெளியிட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் தான் கமல் ஹாசனின் அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றது.
தக் லைஃப் ஜூன் 5 அன்று திரையரங்குகளில் வெளியான பிறகு, எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றது. இதனால், படக் குழு எதிர்பார்த்த ஓட்டம் தக் லைஃபுக்கு கிடைக்கவில்லை. இடையில், படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால் 8 வாரங்களுக்கு முன்பே ஓடிடியில் படம் வெளியாகலாம் என்று தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், தக் லைஃப் படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது. படம் வெளியாகி ஒரு மாத காலத்துக்கு முன்பே தற்போது வெளியாகியிருக்கிறது.