சினிமா

தாத்தா வந்தார்.. கதறவிட்டார்..: இந்தியன் 2 கிழக்கு விமர்சனம்

சுவாமிநாதன்

சேனாபதி கதாபாத்திரம் மீண்டும் திரைக்கு வருகிறதென்றால், அதற்கு மிகப் பெரிய காரணம் தேவை. அந்தக் காரணத்துக்காக சித்தார்த், பிரியா பவானி சங்கர், ஜெகன், ரிஷி ஆகிய கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களைச் சுற்றி கதை தொடங்குகிறது.

சமூகப் பொறுப்புடைய இளைஞர்களாகக் காண்பிக்கப்படும் இவர்கள், சமூக ஊடகங்கள் வாயிலாக சமூகத்தில் நடக்கும் இன்னல்களைக் கொண்டு பகடி விடியோ வெளியிடுகிறார்கள். ஒரு கட்டத்தில் விரக்தி அடையும் இவர்கள், நிதர்சனத்தை உணர்ந்து நம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்பதைப் புரிந்துகொள்கிறார்கள். இந்தப் புரிதலை ஏற்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்ட கதாபாத்திரம்தான் ரகுல் பிரீத் சிங்.

உடனே தங்களுடைய ஆர்வத்தால் துணை தேடுவதற்காக இந்தியன் தாத்தாவை (சேனாபதி) அழைக்கிறார்கள். அதுவும் சமூக ஊடகங்கள் வாயிலாக.. புரட்சிக் குரலாக வெடிக்க, சேனாபதி இந்தத் தருணத்துக்காகதான் காத்திருந்தேன் என மீண்டும் இந்தியா வருகிறார்.

இந்தியா வந்த சேனாபதி என்ன செய்கிறார், அவரால் சித்தார்த் குழுவினரின் வாழ்க்கையிலும் மற்றும் நாட்டிலும் என்ன தாக்கம் ஏற்படுத்துகிறது, இறுதியில் சேனாபதி என்ன ஆகிறார் என்பதுதான் இந்தியன் 2 கதை.

திரைக்கதை:

இந்தியன் முதல் பாகம் ஊழலை மையமாகக் கொண்டிருந்தது. இந்தியன் இரண்டாம் பாகம் காலத்துக்கேற்ப மாற்றம் அடைந்திருக்குமா என்றால், இதிலும் ஊழல்தான் மையப் பிரச்னையாக உள்ளது. திரைக்கதையில் புதுமையை எதிர்பார்த்தால், அதிலும் ஏமாற்றமே மிஞ்சியது.

சேனாபதி மற்றும் சேனாபதியைச் சுற்றில் சித்தார்த் குழு, பாபி சிம்ஹா குழு நகர்கிறது.

ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு அளவு இருக்கிறது. இதில் காட்சியின் நீளம் தேவைக்கு அதிகமாக இருந்தது சலிப்பை தருகிறது. போதாதென்று முந்தையக் காட்சியின் மூலம் ஓர் உணர்வு கடத்தப்படுகிறதென்றில், அடுத்தக் காட்சியின் நோக்கம் வேறாக இருக்க வேண்டும். ஆனால், ஒரே உணர்வைக் கடத்தும் காட்சிகளே திரும்பத் திரும்ப வருகிறது. சித்தார்த் மற்றும் குழுவைச் சுற்றி நகரும் காட்சிகளில் உள்ள சிக்கல் இது.

சேனாபதி கொலையைச் செய்வது சுவராசியம் அல்ல. அந்தக் கொலைக்கான காரணம் வலுவாக இருப்பதுதான் சுவாரசியத்தின் அடிப்படை. இந்த சுவாரசியம் இந்தியன் இரண்டாம் பாகத்தில் குறைவு. சேனாபதி கதாபாத்திரமே, வசனத்தின் வாயிலாக ஒவ்வொரு கொலைக்கு முன்பும் நமக்கு பாடமெடுப்பது சலிப்பு தட்டுகிறது.

சேனாபதியைப் பிடிப்பதே சிபிஐ அதிகாரியாக வரும் பாபி சிம்ஹாவின் லட்சியமாக இருக்க, இந்தியன் 2 முழுக்க சேனாபதியைப் பிடிப்பது மட்டுமே இவருக்கான காட்சிகளாக உள்ளன. ஒருவழியாக இறுதியில் பிடித்துவிட்டாரே என்று எண்ணும்போது, அதிலும் ட்விஸ்ட் வைப்பதாக ஒன்றைச் செய்தது இவருடையக் காட்சிகளிலும் பரபரப்பைக் கூட்டவில்லை.

ஒரே கதையாக இருந்தாலும், மூன்று பகுதிகளாக வரும் இவர்களுடையக் காட்சிகள் ஒன்றோடு ஒன்று இணையாமல் இருப்பது திரைக்கதையில் கூடுதல் பிரச்னையாக உள்ளது.

இவற்றுக்கு மத்தியில் படத்தில் விறுவிறுப்பைக் கூட்ட ஒளிப்பதிவாளர் ரவி வர்மன், படத்தொகுப்பில் ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் முயற்சித்திருக்கிறார்கள். ஓரளவு கைகொடுத்தாலும், பெரிதளவில் கைகொடுக்கவில்லை. இந்தியன் முதல் பாகத்தில் பயன்படுத்தப்பட்ட ஏ.ஆர். ரஹ்மான் இசை இதிலும் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதே சேனாபதிதான் என்றாலும் முதல் பாகத்தில் கிடைத்த உணர்வு, இதில் கிடைக்கவில்லை.

இந்தப் படம் முடியும்போது, மூன்றாம் பாகத்துக்கான உற்சாகம் கிடைக்க வேண்டும். அதற்குத் தகுந்தாற்போல இந்தக் கதை முடிந்திருக்க வேண்டும். ஆனால், இது அப்படி முடியவில்லை.

1996-ல் ஊழல் மையப் பிரச்னையாக இருந்தது. இன்றும் ஊழலே மையப் பிரச்னையாக இருக்கிறது. அன்றும் சேனாபதி தாத்தா கையில் கத்தியெடுத்தார். இன்றும் அதே சேனாபதி, ஏறத்தாழ அதே தோற்றத்துடன் மீண்டும் கையில் கத்தியெடுக்கிறார். ஷங்கரின் இந்தியன், அந்நியன் படங்களில் பார்த்ததைப்போல, இதிலும் மக்களிடம் உரையாடுகிறார். உரையாடுவதற்கான தளம் மட்டுமே மாறியிருக்கிறது, உரையாடலும் மாறவில்லை, உரையாடும் ஆளும் மாறவில்லை. ஆக, உத்வேகம் அளிக்கக்கூடிய அளவுக்குப் புதிய அம்சங்கள் எதுவும் இடம்பெறாதது படத்தில் குறை.

இந்தக் குறைகளுக்குக் காரணம் இந்தியன் 2, 3 என இரண்டு பாகங்களாக வெளிவந்திருப்பது. ஒரே படமாக வந்திருந்தால், மூன்றாம் பாகத்தில் வரக்கூடிய கமலின் தோற்றம் குறைந்தபட்சம் புதுமையாக இருந்திருக்கலாம். மேலும், இரண்டாம் பாகத்தை மூன்று மணி நேரத்துக்கு நீட்டிக்க வேண்டும் என்பதற்காகவே சில காட்சிகளைத் திணித்தது பின்னடைவாக அமைந்துவிட்டது.

கதை, திரைக்கதையைத் தாண்டி சமூகத்தைப் பகடி செய்யும்போது, அரசு நலத் திட்டங்களின் அங்கமான இலவசங்களைப் பகடி செய்திருக்கிறார்கள். பகடி செய்த விதம் நிச்சயம் விமர்சனத்தைச் சம்பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை நிச்சயம் தவிர்த்திருக்கலாம்.

மொத்தத்தில் இந்தியன் 2 திரைப்படத்தைப் பார்க்கலாமா, வேண்டாமா என்று முடிவெடுக்க வேண்டுமெனில், 28 ஆண்டுகளுக்குப் பிறகு சேனாபதி மீண்டும் திரையரங்குகளுக்கு வருகிறார். அதற்காகப் பார்க்கலாம். கதறலைப் பொறுத்துக்கொண்டால் அதற்காக மட்டுமே பார்க்கலாம்.