கோப்புப்படம் 
சினிமா

'வேதனையளிக்கிறது': கர்நாடக திரைப்பட வர்த்தகச் சபைக்கு கமல் கடிதம்

"தமிழைப் போல கன்னடத்திலும் பெருமைக்குரிய எழுத்து மற்றும் கலாசார மரபு இருக்கிறது."

கிழக்கு நியூஸ்

கன்னட மொழி குறித்து பேசியது தொடர்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடக திரைப்பட வர்த்தகச் சபை கோரியிருந்த நிலையில், கமல் ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.

தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் ஷிவ ராஜ்குமார் பற்றி பேசும்போது, தமிழ் மொழியிலிருந்து கன்னடம் பிறந்தது என்ற அர்த்தத்தை உணர்த்தும் வகையில் கமல் ஹாசன் பேசியது சர்ச்சையானது. கமல் ஹாசனுக்கு எதிராக கட்சி வேறுபாடின்றி அங்கு கண்டனக் குரல்கள் எழுந்தன. கன்னட மொழி பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்காவிட்டால், தக் லைஃப் படம் கர்நாடகத்தில் திரையிடப்படாது என கர்நாடக திரைப்பட வர்த்தகச் சபை எச்சரித்தது.

கமல் ஹாசன் மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தார். மேலும், இவ்விவகாரம் தொடர்பாக கமல் ஹாசன் கர்நாடக உயர் நீதிமன்றத்தை நாடினார். தக் லைஃப் படம் திரையிடப்பட்டால் எவ்விதப் பிரச்னையும் எழாதவாறு உரிய பாதுகாப்பை அளிக்க வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "கமல் ஹாசனாக இருக்கலாம், யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது. மொழி அடிப்படையில் தான் நாடு பிரிந்து கிடக்கிறது. ஒரு பிரபலம் இதுமாதிரியான கருத்துகளைக் கூறக் கூடாது. இதனால் நல்லிணக்கம் கெட்டு அமைதியின்மை சூழல் நிலவுகிறது. கர்நாடக மக்கள் வெறும் மன்னிப்பு தான் கேட்கிறார்கள். நீங்கள் பாதுகாப்பு கோரி வந்து நிற்கிறீர்கள். நீங்கள் எதன் அடிப்படையில் இந்தக் கருத்தை முன்வைத்தீர்கள். நீங்கள் வரலாற்று அறிஞரா மொழியியல் வல்லுநரா, எதன் அடிப்படையில் இவ்வாறு பேசினீர்கள்?

இதே மாதிரியான கருத்துக்கு ராஜகோபால் மன்னிப்பு கேட்டார். நீங்கள் படம் வெளியாவதற்காகப் பாதுகாப்பு கேட்கிறீர்கள். ஒரு மன்னிப்பு கேட்டால் முடிவுக்கு வந்துவிடும்.

தவறுகள் நடக்கலாம். ஆனால், தவறுகள் நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும்" என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கூறியது. இந்த வழக்கானது பிற்பகல் 2.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, கர்நாடக திரைப்பட வர்த்தகச் சபைக்கு கமல் ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.

"தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் நான் பேசியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது வேதனையளிக்கிறது. ராஜ்குமார் குடும்பத்தினர் குறிப்பாக ஷிவ ராஜ்குமார் மீதான உண்மையான பாசத்தின் வெளிப்பாடாகவே அவ்வாறு பேசினேன். நாம் அனைவரும் ஒன்று, ஒரே குடும்பத்திலிருந்து வந்தவர்கள் என்பதைத் தான் கூற முற்பட்டேன். எந்த வகையிலும் கன்னட மொழியைச் சிறுமைப்படுத்துவது என் எண்ணம் இல்லை. கன்னட மொழியின் வளமான பாரம்பரியம் பற்றி பேச்சோ விவாதமோ இல்லை. தமிழைப் போல கன்னடத்திலும் பெருமைக்குரிய எழுத்து மற்றும் கலாசார மரபு இருக்கிறது. இதை நீண்ட காலமாக நான் போற்றியிருக்கிறேன்.

திரைத் துறையில் என் பயணம் முழுவதிலும், கன்னட மொழி பேசும் சமூகத்தினர் எனக்கு அளித்த அன்பையும் பாசத்தையும் நான் மிகவும் போற்றி வந்துள்ளேன். இதை நான் தெளிவான மனசாட்சியுடனும் உறுதியுடனும் கூறுகிறேன். மொழி மீதான எனது அன்பு உண்மையானது. கன்னடர்கள் தங்கள் தாய்மொழியின் மீது வைத்திருக்கும் அன்பின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்த மண்ணில் உள்ள அனைத்து மொழிகளுடனும் எனக்குள்ள பிணைப்பு என்பது நிலையானது மற்றும் மனப்பூர்வமானது. அனைத்து இந்திய மொழிகளுக்குமான சம கண்ணியத்திற்காக நான் எப்போதும் துணை நின்றிருக்கிறேன். மேலும் ஒரு மொழியின் ஆதிக்கத்தை மற்றொரு மொழியின் மீது செலுத்துவதை நான் தொடர்ந்து எதிர்த்து வருகிறேன். காரணம், அத்தகைய ஏற்றத்தாழ்வு இந்திய ஒன்றியத்தின் மொழியியல் கட்டமைப்பைக் குறைத்து மதிப்பிடுகிறது.

சினிமா எனும் உலகளாவிய மொழிக்கும் அன்பும் பிணைப்பும் மட்டும்தான் தெரியும். நம் அனைவருக்கும் இடையே பிணைப்பையும் ஒற்றுமையையும் நிலைநாட்டுவதற்காக மட்டும் தான் நான் பேசியது. என் மூத்தவர்கள் எனக்குக் கற்றுக்கொடுத்த இந்த அன்பையும்ம் பிணைப்பையும், நான் பகிர்ந்துகொள்ள விரும்பினேன்.

அன்பு மற்றும் நல்லுறவின் வெளிப்பாடாகவே ஷிவ ராஜ்குமார் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இதனால் அவர் இவ்வளவு அசௌகரியங்களைச் சந்திக்க நேர்ந்தது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. ஆனால், நாம் ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள அன்பும் மரியாதையும் நிலைத்து நிற்கும். இது இனி மேலும் திடமாகும்.

சினிமா என்பது மக்களுக்கு இடையிலான ஒரு பாலமாக இருக்க வேண்டுமே தவரி, ஒருபோதும் அவர்களிடையே பிரிவினையை உண்டாக்குவதாக இருக்கக் கூடாது. இதுவே என் நோக்கம், பொது அமைதியின்மை மற்றும் வெறுப்புக்கு நான் ஒருபோதும் இடம் கொடுத்ததில்லை, கொடுக்கவும் விரும்பவில்லை.

எனது வார்த்தைகள் அவை நோக்கம் கொண்ட உணர்வில் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நம்புகிறேன். கர்நாடகம், கர்நாடக மக்கள் மற்றும் அவர்களுடைய மொழி மீதான எனது நீடித்த பாசம் அங்கீகரிக்கப்படும் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன். இந்தத் தவறான புரிதல் தற்காலிகமானது என்றும், நமது பரஸ்பர அன்பையும் மரியாதையையும் மீண்டும் வலியுறுத்துவதற்காகக் கிடைத்த ஒரு வாய்ப்பு என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்" என்று கமல் ஹாசன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.