சினிமா

ஆஸ்கர் விருது தேர்வுக்குழுவில் இடம்பெறும் கமல் ஹாசன்!

சினிமா மீதான கமல் ஹாசனின் அர்ப்பணிப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் இத்தகைய அழைப்பை ஆஸ்கர் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ராம் அப்பண்ணசாமி

இந்தியாவில் இருந்து கமல் ஹாசன் உள்ளிட்ட பலருக்கும் ஆஸ்கர் விருது தேர்வுக்குழுவில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்கர் விருது தேர்வுக்குழுவில் இணைய உலகம் முழுவதிலும் இருந்து சினிமா தொடர்புடைய 534 பேருக்கு, `அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ்’ என்று அழைக்கப்படும் ஆஸ்கர் அமைப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்தியாவில் இருந்து கமல் ஹாசன், ஆயுஷ்மான் குரானா, கரண் மாலி, இயக்குநர் பாயல் கபாடியா, ஒளிப்பதிவாளர் ரன்வீர் தாஸ், ஆடை வடிவமைப்பாளர் மாக்சிமா பாசு, ஆவணப்பட தயாரிப்பாளர் ஸ்மிருதி முந்த்ரா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்கர் அமைப்பின் இந்த அழைப்பை இவர்கள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அடுத்த ஆண்டு வழங்கப்படவிருக்கும் ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறும் படங்களைத் தேர்ந்தெடுப்பது மட்டுமல்லாமல், எந்த படங்கள் விருதுகளைப் பெறவேண்டும் என்பதை தீர்மானிக்கும் வாக்காளர்களாகவும் செயல்படுவார்கள்.

சினிமா மீதான கமல் ஹாசனின் அர்ப்பணிப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் இத்தகைய அழைப்பை ஆஸ்கர் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை ஹே ராம், குருதிப்புனல் உள்பட கமல்ஹாசனின் ஏழு படங்கள் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஆனால் எந்த படமும் இறுதிப்பட்டியலில் பெறவில்லை.

98-வது ஆஸ்கர் விருது விழா அடுத்தாண்டு மார்ச் 15-ல், அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸின் ஹாலிவுட் பகுதியில் உள்ள டால்பி திரையரங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வை கோனன் ஓ’பிரையன் தொகுத்து வழங்குகிறார்.

முன்னதாக, 2022-ல் நடிகர் சூர்யா ஆஸ்கர் அகாடமியின் அழைப்பை ஏற்று அதன் உறுப்பினரானார்.