இயக்குநர் பேரரசுக்கு வெற்றிமாறன் பதிலடி
இயக்குநர் பேரரசுக்கு வெற்றிமாறன் பதிலடி  
சினிமா

கதை நல்லா இருந்தாதான் படம் ஓடும்: இயக்குநர் பேரரசுக்கு வெற்றிமாறன் பதிலடி

யோகேஷ் குமார்

கள்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு பேசியதற்கு இயக்குநர் வெற்றிமாறன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகின்றன.

ஜி.வி. பிரகாஷ், இவானா, பாரதிராஜா போன்ற பலர் நடித்திருக்கும் படம் ‘கள்வன்’. பி.வி.சங்கர் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஏப்ரல் 4 அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் கள்வன் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் லிங்குசாமி, பேரரசு, வெற்றிமாறன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.

இப்படம் குறித்து பேசிய இயக்குநர் பேரரசு, “இப்படம் யானையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. யானைகளை மையமாக வைத்து எம்.ஜி.ஆர் நடித்த ‘நல்ல நேரம்’ படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. அதே போல ரஜினி நடித்த ‘அன்னை ஒரு ஆலயம்’ படமும் வெற்றி அடைந்தது. மேலும் யானையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘கும்கி’ படமும் வெற்றிபெற்றது. யானை என்பது தமிழ் சினிமாவிற்கு எப்போதும் ராசிதான். எனவே கள்வன் படமும் மிகப்பெரிய வெற்றிபெறும்” என்றார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் இயக்குநர் வெற்றிமாறன், “நான் இதை சொல்வதால் சர்ச்சை ஆகலாம். நீங்கள் யானையை வைத்து படம் எடுத்தாலும், டைனோசரை வைத்து படம் எடுத்தாலும் கதை நன்றாக இருந்தால் மட்டுமே படம் ஓடும்” என்றார்.