அர்ஜுன் தாஸ் @iam_arjundas
சினிமா

அமிதாப் பச்சனுக்கு டப்பிங்: ‘கல்கி’ அனுபவம் குறித்து அர்ஜுன் தாஸ்

“அமிதாப் பச்சனின் ஒரு வசனம் என்னிடம் இருக்கிறது என்று பெருமையாக சொல்வேன்”.

யோகேஷ் குமார்

அமிதாப் பச்சனின் குரலை மிமிக்ரி செய்து பார்த்திருப்பதாக நடிகர் அர்ஜுன் தாஸ் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் எனப் பல பிரபலங்கள் நடித்த ‘கல்கி 2898 ஏடி’ படம் ஜூன் 27 அன்று வெளியானது.

இப்படத்தில் கிருஷ்ணர் கதாபாத்திரத்தில் நடித்த அமிதாப் பச்சனுக்கு தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் அர்ஜுன் தாஸ் டப்பிங் செய்துள்ளார். இந்நிலையில் இந்த அனுபவம் குறித்து அர்ஜுன் தாஸ் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது:

“சில வாரங்களுக்கு முன்பு ஸ்வப்னா (படத்தின் தயாரிப்பாளர்) இடமிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. “நீங்கள் கல்கியில் கிருஷ்ணருக்கு டப்பிங் செய்ய வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்” என்றார். முதலில் நான் சற்று தயங்கினேன். ஆனால், அதன் பிறகு அவர் இரண்டு விஷயங்களை என்னிடம் சொன்னார்.

“நீங்கள் அமிதாப் பச்சனுடன் பேசுவீர்கள். என்னை நம்பி வாருங்கள்” என்றார்.

ஒரு ரசிகராக சிறுவயதிலிருந்தே பள்ளி மற்றும் கல்லூரியில் அமிதாப் பச்சனின் குரலை நான் மிமிக்ரி செய்து பார்த்திருக்கிறேன்.

ஸ்டுடியோவுக்கு சென்றதும் அமிதாப் பச்சனின் டப்பிங்கை போட்டுகாட்டச் சொன்னேன். பள்ளி பருவத்தில் இருந்து அவரது குரலை பலரிடம் பேசி காட்டிய நினைவுகள் என் மனதில் ஓடத் தொடங்கின. இதன் பிறகு சிறிது நேரத்திற்கு பிறகு பேசத் தொடங்கினேன்.

படத்தின் வேலைகள் அதிகமாக இருந்தாலும், இயக்குநர் நாக் அஸ்வின், எனக்காக நேரத்தை ஒதுக்கி என்னைமிகச் சிறப்பாக வழி நடத்தினார். துரதிஷ்டவசமாக நேரம் குறைவாக இருந்த காரணத்தால் என்னால் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் மட்டுமே டப்பிங் பேச முடிந்தது.

யாராவது என்னிடம் வந்து தங்களிடம் பணம், புகழ், சொத்து எல்லாம் இருக்கிறது உன்னிடம் என்ன இருக்கிறது என்று கேட்டால், “அமிதாப் பச்சனின் ஒரு வசனம் இருக்கிறது என்று பெருமையாக சொல்வேன்” என்றார்.