சினிமா

கலைமாமணி விருது தங்கத்தை விட மதிப்புமிக்கது: முதல்வர் ஸ்டாலின் | Kalaimamani Awards |

இசையமைப்பாளர் அனிருத், நடிகர்கள் எஸ்.கே. சூர்யா, சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி...

கிழக்கு நியூஸ்

மொழி சிதைந்தால் இனமும் பண்பாடும் சிதைந்துவிடும். தமிழர் என்ற தகுதியையும் சுயமரியாதையையும் இழந்து வாழ்வதில் என்ன பயன் என்று கலைமாமணி விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் இயல் இசை நாடக மன்றம், கலைத்துறையில் சிறந்த பணியாற்றி வரும் கலைஞர்களைக் கௌரவிக்கும் விதமாகக் கலைமாமணி விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி சென்னை கலைவாணர் அரங்கத்தில் 2021, 2022, 2023 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சுவாமிநாதன், சேகர் பாபு உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

முனைவர் ந. முருகேச பாண்டியன் பாரதியார் விருதையும், பாடகர் பத்மபூஷன் கே.ஜே. யேசுதாஸ் சார்பாக அவரது மகன் விஜய் யேசுதாஸ் எம்.எஸ். சுப்புலட்சுமி விருதையும், நாட்டியக் கலைஞர் முத்துக் கண்ணம்மாள் பாலசரசுவதி விருதையும் பெற்றனர்.

தொடர்ந்து நடிகர்கள் எஸ்.கே. சூர்யா, சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, மணிகண்டன், ஜார்ஜ் மரியான், இசையமைப்பாளர் அனிருத், நடன இயக்குநர் சாண்டி, நடிகர்கள் விக்ரம் பிரபு, ஜெயா வி.சி. குகநாதன், பாடலாசிரியர் விவேகா உள்ளிட்ட 2021, 2022, 2023 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது அறிவிக்கப்பட்ட 90 கலைஞர்கள் விருதுகளைப் பெற்றனர்.

நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

“1967-ல் பேரறிஞர் அண்ணா கையால் கலைஞர் கருணாநிதி பெற்ற கலைமாமணி விருதை, இன்றைக்கு நீங்களும் பெறுகிறீர்கள். 2021 2022 2023 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கும் சேர்த்து பல்வேறு கலை பிரிவுகளில் விருதுகளை வழங்குவதில் பெருமை அடைகிறேன். இன்று கலைமாமணி விருது பெறுபவர்கள் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள். உங்களில் பலரது கலைத்தொண்டு பற்றி எனக்குத் தெரியும்.

இன்று மூத்த கலைஞர் மட்டுமின்றி வளர்ந்து வரும் இளங்கலைஞர்களும் விருது பெறுகிறார்கள். நீங்களே பார்க்கலாம். 90 வயதான முத்துக் கண்ணம்மாளும் கலைமாமணி விருது பெறுகிறார். இளம் இசையமைப்பாளர் அனிருத்தும் விருது பெறுகிறார்.

இதில் கலைஞர்களுக்குத் தங்க பதக்கமும் வழங்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு தங்கத்தின் விலை எப்படி ராக்கெட் வேகத்தில் ஒரு நாளைக்கு இரண்டு முறை உயர்கிறது என்பது உங்களுக்கே தெரியும். ஆனால் இந்தக் கலைமாமணி விருது தங்கத்தை விட மதிப்பு மிக்கது. ஏனென்றால் இது தமிழ்நாடு அரசு தரும் பட்டம்.

தொன்மையான கலைகளை வளர்த்தல், கலைஞர்களை ஊக்குவித்தல், அழிந்து வரும் கலைகளை ஆவணமாக்குதல், நாடகத்திற்கும், நாட்டிய நாடகத்திற்குப் புத்துயிர் அளித்தல், நம் பாரம்பரிய கலைகளை வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் கொண்டு செல்லுதல், கலைஞர்களுக்கு விருதுகள் வழங்குதல், நலிந்த நிலையில் உள்ள கலைஞர்களுக்கு மாதாந்திர நிதியுதவி வழங்குதல் ஆகிய பணிகளை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சிறப்பாகச் செய்து வருகிறது. அதன் அடையாளம்தான் இந்த விழா.

நமது அரசு கலைகளை போற்றும் அரசாக, முத்தமிழைப் போற்றும் அரசாகத்தான் எப்பொழுதும் இருக்கும். அதற்கு மாபெரும் எடுத்துக்காட்டு தான் சிம்போனி சிகரம் தொட்ட தமிழர் இளையராஜாவுக்கு எடுக்கப்பட்ட மாபெரும் பாராட்டு விழா. உலகில் எந்த கலைஞருக்கும் எந்த அரசாங்கமும் இப்படி ஒரு பாராட்டு விழா நடத்தியது இல்லை என்று இளையராஜாவே குறிப்பிட்டார். என் மீது ஏன் இத்தனை பாசம் என்று அவர் கேட்டார். அவர் மீது நமக்கு இருப்பது கலைப்பாசம், தமிழ்ப்பாசம், தமிழர் என்கிற பாசம். அதனால்தான் அந்த விழாவை எடுத்தோம். இன்று உங்களுக்கும் அதே பாசத்தின் அடிப்படையில் தான் இந்த விருதுகளை வழங்குகிறோம்.

கருத்து, கொள்கை, பாணி, பரப்புரை ஆகியவற்றை நாடகக் கலைக்குள் நுழைத்தது திராவிட இயக்கம்தான். எழுத்தும் பேச்சும் இலக்கியமும் கலையும் மொழியையும் வளர்க்கிறது. காக்கிறது. மொழி சிதைந்தால் இனமும் பண்பாடும் சிதைந்துவிடும். நம் அடையாளமே அழிந்துவிடும். அடையாளம் அழிந்தால் தமிழர் என்று சொல்லிக்கொள்ளும் தகுதியையே இழந்துவிடுவோம். தமிழர் என்ற தகுதியையும் சுயமரியாதையையும் இழந்து வாழ்வதில் என்ன பயன்?

அதனால் கலைகளைக் காப்போம். மொழியைக் காப்போம். இதயத்தைக் காப்போம். இனத்தைக் காப்போம். அடையாளத்தைக் காப்போம்” என்றார்.