கமல் @ikamalhaasan
சினிமா

பாலசந்தர் இன்னும் எங்களுடன் இருக்கிறார்: கமல்

"நான் அவரைப் பற்றி பேசாத நாட்களே கிடையாது என்பது தான் உண்மை".

யோகேஷ் குமார்

மறைந்த இயக்குநர் கே. பாலசந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு, நடிகர் கமல் அவரைப் பாராட்டி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரஜினி, கமல் போன்ற பல நடிகர்களை அறிமுகம் செய்தவர் இயக்குநர் கே. பாலசந்தர். இன்று அவர் பிறந்த நாளை முன்னிட்டு அவரைப் புகழ்ந்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார் கமல்.

அதில் அவர் பேசியதாவது

பாலசந்தரை பற்றி குறிப்பிட்ட நாளில் பேச வேண்டும், அவரது பிறந்த நாளில் பேசுங்கள் என்றெல்லாம் சொல்லி நினைவுபடுத்துகிறார்கள்.

எனக்கு அப்படி நினைவு கூறும் விதமாக குறித்து வைத்துக் கொள்ளும் நாட்கள் என்று எதுவும் கிடையாது.

நான் அவரைப் பற்றி பேசாத நாட்களே கிடையாது என்பது தான் உண்மை. என்னைப் பற்றி தெரிந்தவர்களுக்கு அந்த உண்மை தெரியும்.

என்னைப் பொறுத்தவரை பாலசந்தர் என் வாழ்க்கையில் சில முன்னேற்றங்கள் தந்தார் என்பதற்காக மட்டும் போற்றப்படக் கூடியவர் அல்ல.

என்னைப் போல பல நடிகர்களை, பல நட்சத்திரங்களை தனக்கு ஏதும் பயனில்லாத போதும், தான் செய்யும் தொழிலுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதற்காக அறிமுகப்படுத்தியவர்.

அந்த அளவுக்கு விடாமுயற்சியாக புதுமைகளையும், புதுமுகங்களை அறிமுகப்படுத்திய வேறு எந்த இயக்குநரும் எனக்கு சட்டென்று நினைவுக்கு வரவில்லை.

நானும் கிட்டத்தட்ட 60 வருடங்களாக இந்தத் துறையில் இருக்கிறேன். அப்படிப் பார்க்கும்போது என்னுடன் சம்பந்தப்படாமலேயே அவர் இருந்திருந்தாலும், அவருடைய பெயர் விடுபடாது.

என் வாழ்விலும், என்னைப் போன்ற பலரின் வாழ்வில் அவர் செய்திருக்கும் மாற்றங்கள் மறக்க முடியாதவை.

அவர் வீட்டு காம்பவுண்டுக்குள் அடக்க முடியாத குடும்பத்தை உருவாக்கி வைத்து போயிருக்கிறார். போயிருக்கிறார் என்று சொல்ல வாய் கூசுகிறது. அவர் இன்னும் எங்களுடன் இருக்கிறார். அவர் வாழ்க. அவருடைய பிறந்த நாள், எங்களுக்கு திரைதுறையில் அறிவு வளர்ந்த நாள்” என்றார்.