ANI
சினிமா

சூர்யாவின் படங்களுக்கு மட்டும் கடுமையான விமர்சனங்கள்: ஜோதிகா வருத்தம்

"நியாயமாக நடந்துகொள்ளாததால் ஊடகங்கள் மீதும் எனக்கு வருத்தம்."

கிழக்கு நியூஸ்

மற்ற படங்களைக் காட்டிலும் சூர்யாவின் படங்களுக்கு மட்டும் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுவதாக அவருடைய மனைவியும் நடிகையுமான ஜோதிகா தெரிவித்துள்ளார்.

தி பூஜா தல்வார் ஷோவில் ஜோதிகா கூறியது:

"நிறைய மோசமான கமெர்ஷியல் படங்களைப் பார்த்துள்ளேன். அவை நல்ல வெற்றியைப் பெறும். அந்தப் படங்கள் பரந்த மனதுடன் விமர்சனம் செய்யப்படும்.

என் கணவருடையப் படங்களைப் பொறுத்தவரை, கொஞ்சம் கடுமையாக விமர்சனம் செய்யப்படுகிறது. படத்திலுள்ள ஒரு சில அம்சங்கள் சரியாக இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்தமாக அதற்கு நிறைய உழைப்பு செலுத்தப்பட்டுள்ளது.

மற்ற படங்களைக் காட்டிலும் என் கணவருடையப் படங்களுக்குக் கடுமையான விமர்சனங்களைப் பார்க்கும்போது வேதனையளிக்கிறது. அது என்னைப் பாதித்தது. நியாயமாக நடந்துகொள்ளாததால் ஊடகங்கள் மீதும் எனக்கு வருத்தம்" என்றார் ஜோதிகா.

சூர்யா படங்களுக்கு வரும் விமர்சனங்கள் மீதான தன் பார்வையை ஜோதிகா முன்வைப்பது இது முதன்முறையல்ல. சூர்யா நடிப்பில் கடந்த நவம்பரில் வெளியான கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைப் பெறவில்லை. நிறைய எதிர்மறை விமர்சனங்களைச் சம்பாதித்தது கங்குவா.

"கங்குவாவுக்கு முதல் நாளிலேயே முதல் காட்சி முடிவதற்குள்ளேயே இந்தளவுக்கு வெறுப்பைத் தேர்வு செய்தது வருத்தமளிக்கிறது. கங்குவா குழுவினர் பெருமைகொள்ள வேண்டும். எதிர்மறையான கருத்துகளைத் தெரிவிப்பவர்கள், அதை மட்டும்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். சினிமாவை மேம்படுத்த அவர்களிடத்தில் எதுவும் இல்லை!" என்று கங்குவா எதிர்மறை விமர்சனங்களை ஜோதிகா விமர்சித்திருந்தார்.