சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக ஜாய் கிரிஸில்டா அளித்த புகார் குறித்த விசாரணைக்கு இருவரும் மாநில மகளிர் ஆணையத்தில் ஆஜராகினர்.
பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்துவிட்டு, நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா காவல்துறையில் புகார் அளித்தார். தொடர்ந்து மகளிர் ஆணையத்திலும் அவர் புகார் அளித்திருந்தார்.
இந்த விவகாரம் குறித்த மற்றொரு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதற்கிடையில், நீதிமன்றத்திற்கு வெளியே பிரச்னையை தீர்த்துக்கொள்ள ஜாய் கிரிஸில்டா தரப்பில் தன்னை அணுகியதாக நேற்று (அக்.15) அறிக்கை ஒன்றை மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்டார். அதற்கு எதிராக ஜாய் கிரிஸில்டா தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜாய் கிரிஸில்டா மகளிர் ஆணையத்தில் அளித்திருந்த புகார் குறித்து விசாரிக்க மாதம்பட்டி ரங்கராஜ் நேரில் ஆஜராக வேண்டும் என ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. அதே நாளில் புகார் அளித்தவரும் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், மகளிர் ஆணையத்தில் ஆஜராக மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவி ஸ்ருதியுடன் ஆஜரானார். ஜாய் கிரிஸில்டாவும் ஆஜரான நிலையில் இருவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.