மாதம்பட்டி ரங்கராஜுடன் திருமணம் செய்துகொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்த ஜாய் கிறிசில்டா, தற்போது புதிய விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.
சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் மெஹந்தி சர்கஸ், பென்குவின் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமையல் சார்ந்த நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக, நடுவராகப் பங்கேற்று வருகிறார். பிரபலங்களின் திருமணம், முக்கிய விழாக்கள் என்றால் மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் ஒப்பந்தம் செய்யப்படுவது பெரியளவில் பேசப்படுவதுண்டு.
இவருக்கும் வழக்கறிஞர் ஸ்ருதி என்பவருக்கும் ஏற்கெனவே திருமணம் நடைபெற்றுள்ளது. இருவருக்கும் இரு குழந்தைகள் உள்ளார்கள். மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவருடைய மனைவி ஸ்ருதி இடையே மனக்கசப்பு இருப்பதாகவும் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் தான், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிசில்டாவை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகின.
திரைத் துறையில் ஆடை வடிவமைப்பாளராக உள்ள ஜாய் கிறிசில்டா, பிரபலங்களுக்கான ஸ்டைலிஸ்டாகவும் உள்ளார். திரைத் துறையில் விஜய், சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஜிவி பிரகாஷ், அனிருத், ரெஜினா கேஸன்ட்ரா, ஷ்ரதா ஸ்ரீநாத், ஷ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டோருக்கு ஸ்டைலிஸ்டாக பணியாற்றியுள்ளார். குக் வித் கோமாளியில் மாதம்பட்டி ரங்கராஜுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜுடனான திருமண புகைப்படத்தை அண்மையில் பதிவிட்ட ஜாய் கிறிசில்டா, கருவுற்று 6 மாதங்கள் ஆகியுள்ளதாகவும் 2025-ல் குழந்தை பிறக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இது சமூக ஊடகங்களில் பெரியளவில் கவனம் பெற்றது. இந்நிலையில், திருமணம் மற்றும் குழந்தை பிறக்கவுள்ளது பற்றி ஜாய் கிறிசில்டா விளக்கமளித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் அவர் குறிப்பிடுகையில், "தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்காக இப்பதிவு. சில பயணம் அமைதியாகவே தொடங்கும். ஆனால், நம்பிக்கையுடன் அது அடுத்தக் கட்டத்துக்கு நகரும். சில ஆண்டுகளுக்கு முன் நாங்கள் (மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிறிசில்டா) கணவன், மனைவியாக மனதார அன்புசூழ மிகுந்த மரியாதையுடனும் கண்ணியத்துடனும் எங்களுடய பயணத்தைத் தொடங்கினோம். இந்த ஆண்டு குழந்தையை வரவேற்கத் தயாராக இருக்கிறோம்" என்று ஜாய் கிறிசில்டா பதிவிட்டுள்ளார்.
Joy Crizildaa | Madhampatty Rangaraj | Sruthi