https://x.com/pakkatelugunewz
சினிமா

ஜானி மாஸ்டரின் தேசிய விருது நிறுத்திவைப்பு

நடனப் பெண் அளித்த புகாரின்பேரில் பெங்களூரு காவல்துறையினரால் ஜானி கைது செய்யப்பட்டார்.

ராம் அப்பண்ணசாமி

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல நடன இயக்குனர் ஜானி மாஸ்டருக்கு முன்பு அறிவிக்கப்பட்ட தேசிய விருது நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 16-ல், 2022-ம் ஆண்டுக்கான 70-வது தேசிய விருதுகளை அறிவித்தது மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம். இதில் தனுஷ், நித்யா மெனன் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின், `மேகம் கருக்காதா’ பாடலுக்காக ஜானி மற்றும் சதீஷ் கிருஷ்ணன் ஆகியோருக்கு சிறந்த நடன இயக்கத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த நடனப் பெண் ஒருவர் சென்னை, மும்பை மற்றும் ஹைதராபாத் என வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற படப்பிடிப்புகளின்போது, நடன இயக்குநர் ஜானி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் அளித்தார்.

நடனப் பெண்ணின் புகாரின்பேரில் தெலங்கானாவின் ராய்துர்கம் காவல்துறையினர் ஜானி மீது வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, ஜனசேனா கட்சியிலிருந்து ஜானி நீக்கப்பட்டார். மேலும், தெலுங்கானா நடன இயக்குநர் சங்கத்தில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக பெங்களூரு காவல்துறையினரால் ஜானி கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஜானி மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதியப்பட்டுள்ளதை அடுத்து மறு உத்தரவு வரும் வரை அவருக்கு அறிவிக்கப்பட்ட சிறந்த நடன இயக்கத்துக்கான தேசிய விருது நிறுத்தி வைக்கப்படுவதாக, மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய திரைப்பட விருதுகள் பிரிவு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

70-வது தேசிய திரைப்பட விருது விழாவில் பங்கேற்பதற்காக கடந்த அக்.3-ல், ஜானிக்கு அக்டோபர் 6 முதல் 10 வரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது.