கேரளத்தில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. படம்: https://x.com/actorvijay
சினிமா

ஜன நாயகன் காலை 6 மணி காட்சிக்கு அனுமதி: தமிழ்நாட்டில் அல்ல... | Jana Nayagan |

முதலில் அதிகாலை 4 மணிக்கு வெளியிட தயாரிப்பாளர் தரப்பிலிருந்து அனுமதி தரப்பட்டது. எனினும்...

கிழக்கு நியூஸ்

கேரளத்தில் விஜயின் ஜன நாயகன் திரைப்படத்தைக் காலை 6 மணிக்கு வெளியிடவுள்ளதாக அப்படத்தை விநியோகம் செய்யும் எஸ்எஸ்ஆர் என்டர்டெயின்மென்ட்ஸ் அறிவித்துள்ளது.

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜன நாயகன். இப்படம் பொங்கலையொட்டி ஜனவரி 9 அன்று வெளியாகிறது. அரசியல் பிரவேசம் எடுத்துள்ளதால், இது தனது கடைசி படம் என்று விஜய் ஏற்கெனவே அறிவித்துவிட்டார். இதனால், இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு எல்லையில்லாமல் இருக்கிறது. மலேசியாவில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், இது கூடுதல் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

தமிழ்நாட்டில் அண்மைக் காலமாகவே திரையரங்குகளில் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. பெரிய நட்சத்திரங்களின் படங்கள் தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் வெளியாகிறது. இதற்கும் தமிழ்நாடு அரசின் பிரத்யேக அனுமதியைப் பெற வேண்டும்.

இதனால், ரசிகர்கள் எல்லையோர மாவட்டங்களுக்குச் சென்று அதிகாலை காட்சிகளைப் பார்ப்பது அவ்வப்போது வழக்கமாக இருந்து வருகிறது. இதன்படி, கேரளத்தில் ஜனநாயகனை அதிகாலை 4 மணிக்கு வெளியிட அனுமதி தரப்பட்டதாகத் தெரிகிறது. தற்போது, கேரளத்தில் காலை 6 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எஸ்எஸ்ஆர் என்டர்டெயின்மென்ட்ஸ் எனும் நிறுவனம் தான் இப்படத்தைக் கேரளத்தில் வெளியிடுவதற்கான உரிமையைப் பெற்றுள்ளது.

இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"ஜன நாயகன் முதல் காட்சியை கேரளத்தில் அதிகாலை 4 மணிக்கு வெளியிட தேவையான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டோம். முதலில் அதிகாலை 4 மணிக்கு வெளியிட தயாரிப்பாளர் தரப்பிலிருந்து அனுமதி தரப்பட்டது. எனினும் தற்போதைய சூழல் மற்றும் தமிழ்நாட்டில் எழும் சில விஷயங்கள் காரணமாக அதிகாலை 4 மணி காட்சிக்கான உரிமத்துக்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை.

எனவே, ஜன நாயகன் முதல் காட்சி கேரளத்தில் காலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது. அனைத்து கேரள தளபதி ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். ஜனவரி 9 காலை 6 மணி காட்சிக்கு முழு ஆதரவு கிடைக்கும் என்றும் ரசிகர்கள் இதை மெகா வெற்றியாக மாற்றுவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி வெளியாகும். இக்காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதியை வழங்கிடுமா என்பது ஜனவரி 2-வது வாரத்தில் தான் தெரியவரும்.

Jana Nayagan FDFS | Jana Nayagan Kerala | Jana Nayagan | Vijay | Actor Vijay | Jana Nayagan Audio Launch |