அமீர் 
சினிமா

ஜாஃபர் சாதிக் விவகாரம்: தீர்ப்பெழுதும் அதிகாரத்தைத் தந்தது யார் என அமீர் கேள்வி

“ஜாஃபர் சாதிக்கிற்கும் எனக்கும் தொடர்பு இருக்கு. ஆனால், அவர் மீது வைக்கும் குற்றச்சாட்டுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை”.

யோகேஷ் குமார்

ஜாஃபர் சாதிக்கிற்கும் எனக்கும் தொடர்பு இருக்கு. ஆனால், அவர் மீது வைக்கும் குற்றச்சாட்டுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என இயக்குநர் அமீர் பேசியுள்ளார்.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாஃபர் சாதிக் கடந்த மார்ச் 9-ல் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். ஜாஃபர் சாதிக் நடத்தி வந்த கும்பல் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு 3,500 கிலோ சூடோபெட்ரைன் கடத்தப்பட்டதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஜாஃபர் சாதிக்குக்குத் தமிழ்த் திரைத் துறை மற்றும் பாலிவுட்டில் தொடர்பு இருப்பதாகவும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தை ஜாஃபர் சாதிக் தயாரித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் இயக்குநர் அமீர் உட்பட மூன்று நபர்கள், ஏப்ரல் 2 அன்று தில்லி அலுவலகத்தில் ஆஜராகும்படி மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியது. இதன் பிறகு தில்லியில் உள்ள தேசிய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் இயக்குநர் அமீரிடம் விசாரணை செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள இயக்குநர் அமீரின் அலுவலகத்திலும், ஜாஃபர் சாதிக் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் சமீபத்தில் சோதனை செய்தனர்.

இந்நிலையில் அமீர் நடித்த உயிர் தமிழுக்கு படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

இதில் அமீர் பேசியதாவது:

“ராமாயணத்தில் வருகிற சீதையும், நானும் கிட்டத்தட்ட உடன் பிறந்தவர்கள் போல. அவர் அக்கினியில் மிதந்து தன்னுடைய கற்பை நிரூபித்தார். அவராவது ஒருமுறை தான் நிரூபித்தார். நான் வாரந்தோறும் நிரூபித்து கொண்டிருக்கிறேன்.

ஜாஃபர் சாதிக்கை பொதுவெளியில் என் தம்பி எனச் சொன்னேன். அவர் மீது ஒரு குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள். அப்போது நான் எதையாவது மறுக்க முடியுமா? அவரை எனக்கு 10 ஆண்டுகளாக தெரியும். ஜாஃபர் சாதிக்கிற்கும் எனக்கும் தொடர்பு இருக்கு. ஆனால், அவர் மீது வைக்கும் குற்றச்சாட்டுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதை நான் திமிராகவும், தைரியமாகவும் கூறுவேன்.

என்னை சந்தேகப்படுவதில் எந்தத் தப்பும் இல்லை. ஆனால், எதையும் சரியாக விசாரிக்காமல் நீங்களாக தீர்ப்பு எழுதுவது மிகவும் ஆபத்தானது. அந்த தீர்ப்பை எழுதுவதற்கு யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது?” என்றார்.