ANI
சினிமா

அல்லு அர்ஜுன் vs தெலங்கானா முதல்வர்: பிரச்னை என்ன?

"கடந்த 20 ஆண்டுகளாக நீங்கள் என்னைப் பார்த்துக் கொண்டு வருகிறீர்கள். நான் அப்படி பேசக்கூடியவன் தானா அல்லது அப்படி நடந்துகொள்பவன் தானா? நிறைய தவறான தகவல்கள் உள்ளன."

கிழக்கு நியூஸ்

திரையரங்கில் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நிறைய தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் பொய்க் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவதாகவும் அல்லு அர்ஜுன் விளக்கமளித்துள்ளார்.

புஷ்பா 2 வெளியீட்டின்போது, கடந்த டிசம்பர் 4 அன்று ஹைதராபாதிலுள்ள சந்தியா திரையரங்கில் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இந்தப் படத்தைப் பார்க்க அல்லு அர்ஜுன் திரையரங்குக்கு வந்திருந்தார். அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் கூடியதால், அங்கு கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். இவருடைய மகன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். தெலங்கானா உயர் நீதிமன்றம் வழங்கிய இடைக்காலப் பிணை மூலம் வெளியே வந்தார். ஓர் இரவை மட்டும் சிறையில் கழித்தார் அல்லு அர்ஜுன். இவர் சிறையிலிருந்து வெளியே வந்தவுடன், தெலுங்கு திரை நட்சத்திரங்கள் அவருடைய வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்தார்கள்.

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஹைதராபாத் திரையரங்கில் கூட்டநெரிசலில் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று விளக்கமளித்தார்.

அப்போது, "காவல் துறை அனுமதி மறுத்தும், விதிகளை மீறியே அல்லு அர்ஜுன் திரையரங்குக்குப் படம் பார்க்கச் சென்றார். கூட்டநெரிசல் ஏற்பட்டு பெண் உயிரிழந்துள்ளார் என்பதை அறிந்தும் படம் பார்க்கவே அல்லு அர்ஜுன் விரும்பினார். கைது செய்யப்படுவீர்கள் என காவல் துறை துணை ஆணையர் எச்சரிக்கை விடுத்த பிறகே, அல்லு அர்ஜுன் திரையரங்கிலிருந்து புறப்பட்டுச் சென்றார். மேற்கொண்டு கூட்டநெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க, அமைதியாகப் புறப்பட்டுச் செல்லுமாறு அறிவுறுத்தியும், ரசிகர்களை நோக்கி கைகளை அசைத்தபடி சாலைப் பேரணியாகச் சென்றுள்ளார்" என்று ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.

மேலும், அல்லு அர்ஜுனுக்குக் கரிசனம் காட்டும் தெலுங்கு திரைத் துறை பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சென்று சந்தித்ததா என்று தெலுங்கு திரைத் துறையையும் காட்டமாக விமர்சித்தார்.

இதைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பாகவும் முதல்வர் ரேவந்த் ரெட்டி வைத்த குற்றச்சாட்டு தொடர்பாகவும் அல்லு அர்ஜுன் விளக்கமளித்துள்ளார்.

ஹைதராபாதில் செய்தியாளர்களைச் சந்தித்த அல்லு அர்ஜுன் கூறியதாவது:

"திரையரங்குக்கு நான் செல்ல, திரையரங்க நிர்வாகம் சார்பில் அனுமதி கோரப்பட்டது. நான் செல்வதற்கான பாதையை காவல் துறையினர்தான் ஏற்படுத்தித் தந்தார்கள். நான் சட்டத்தை மதிப்பவன். நான் வருவதற்கு அனுமதி இல்லை என காவல் துறையினர் அப்போதே கூறியிருந்தால், அப்போதே அங்கிருந்து கிளம்பியிருப்பேன்.

நான் மேற்கொண்டது சாலைப் பேரணி அல்ல. ரசிகர்களை நோக்கி கைகளை அசைத்து திரையரங்குக்குச் சென்றேன். எந்தவொரு காவல் அதிகாரியும் என்னை அங்கிருந்து புறப்படுமாறு அணுகவில்லை. என்னுடையத் தனி மேலாளர் தான் கட்டுக்கடங்காத கூட்டம் இருப்பதால், புறப்படுமாறு கேட்டுக்கொண்டார்.

அதே வயதில் எனக்கு ஒரு குழந்தை உள்ளது. எனக்கு அந்த வேதனை இருக்காதா. யாரையும் காரணம் கூறவில்லை.

அது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். அது முற்றிலும் ஒரு விபத்து. பெண்ணின் குடும்பத்தினருக்கு இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனின் உடல்நிலை குறித்து ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒருமுறை தெரிந்துகொண்டிருக்கிறேன். அவருடைய உடல்நிலை சீராகி வருகிறது. அது மிகவும் நல்ல விஷயம்.

இந்த விவகாரத்தில் நிறைய தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. பொய்க் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. ஏதேனும் துறையையோ அரசியல்வாதியையோ அல்லது அரசாங்கத்தையோ நான் குற்றம் சொல்ல விரும்பவில்லை. டிக்கெட் விலையை அரசு உயர்த்துகிறது. எனவே, அரசின் செயல்பாடுகளில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே. அன்றை நாள் நடந்தது பற்றி நிறைய தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. அதைச் சரிப்படுத்த வேண்டும் என்பது மட்டும்தான் என் விருப்பம்

எனக்கென்று இருக்கும் நற்பெயர் சிதைக்கப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளாக நீங்கள் என்னைப் பார்த்துக் கொண்டு வருகிறீர்கள். நான் அப்படி பேசக்கூடியவன் தானா அல்லது அப்படி நடந்துகொள்பவன் தானா? நிறைய தவறான தகவல்கள் உள்ளன.

நான் ஒரு படம் நடித்துள்ளேன். அது மிகப் பெரிய வெற்றி. ஆனால், கடந்த 15 நாள்களாக நான் எந்தவொரு நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இங்கேயே தனிமையில் அமர்ந்திருக்கிறேன். இந்தப் படத்துக்காக மூன்றாண்டுகள் நான் கடுமையாக உழைத்துள்ளேன். ஆனால், இந்தப் படத்தை நான் திரையரங்கில் பார்க்கவில்லை. படம் பார்ப்பதுதான் எனக்கான பாடம். ஆனால், கடந்த 15 நாள்களாக இங்கு தனிமையில் அமர்ந்துள்ளேன். நடந்த சம்பவத்துக்கு எனக்கு நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை என என்னை ஆசுவாசப்படுத்தி வருகிறேன். அந்த சம்பவத்துக்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார் அல்லு அர்ஜுன்.