படம்: https://www.anujathefilm.com/
சினிமா

ஆஸ்கர் விருது: இறுதி பரிந்துரைப் பட்டியலில் இந்திய குறும்படம்

இறுதிப் பட்டியலுக்கானப் போட்டியிலிருந்த 10 இந்தியப் படங்களில் 9 படங்கள் தேர்வாகவில்லை.

கிழக்கு நியூஸ்

ஆஸ்கர் விருதுக்கான இறுதி பரிந்துரையில் அனுஜா என்கிற இந்திய குறும்படம் தேர்வாகியுள்ளது.

97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 2 அன்று லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள டால்பி தியேட்டரில் நடைபெறுகிறது. இதற்கான இறுதி பரிந்துரைகள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் இந்தியப் படங்கள் இடம்பெற வாய்ப்பு இருக்குமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போட்டியிலிருந்த 10 இந்தியப் படங்களில் 9 படங்கள் தேர்வாகவில்லை.

குறிப்பாக, கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்ற ஆல் வீ இமேஜின் அஸ் லைட் இறுதிப் பட்டியலுக்குத் தேர்வாகலாம் என்றிருந்த எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்துள்ளது. ஸ்வதந்திரியா வீர் சாவர்கர், ஆடுஜீவிதம், பேண்ட் ஆஃப் மஹாராஜாஸ், கங்குவா, கேர்ல்ஸ் வில் பி கேர்ல்ஸ், சந்தோஷ் உள்பட மொத்தம் 10 படங்கள் இந்தியாவிலிருந்து இறுதிப் பட்டியலுக்கான போட்டியில் இருந்தன. இதில் 9 படங்கள் ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பட்டியலுக்குத் தேர்வாகவில்லை.

இருந்தபோதிலும், இந்தியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடிய செய்தியாக, அனுஜா என்கிற குறும்படம் ஆஸ்கர் மேடைக்குப் பரிந்துரையாகியுள்ளது.

குனீத் மோங்கா, பிரியங்கா சோப்ரா தயாரிப்பில் ஆடம் ஜே. கிரேவ்ஸ் இயக்கிய அனுஜா என்கிற குறும்படம், சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படப் பிரிவில் தேர்வாகியுள்ளது. தில்லியைப் பின்னணியாகக் கொண்ட திரைப்படம் இது.