இந்தியன் - 2 
சினிமா

இந்தியன் - 3 படத்தை யாரும் தடுக்க முடியாது: கமல்

“இந்தியன் - 3 எனக்கு பிடிக்கும் என சொன்னதால், இந்தியன் - 2 பிடிக்காது என அர்த்தம் கிடையாது”.

யோகேஷ் குமார்

இந்தியன் - 3 படத்தை ஷங்கரே நினைத்தாலும் தடுக்க முடியாது என்று கமல் பேசியுள்ளார்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து 1996-ல் வெளியான படம் ‘இந்தியன்’. இப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இதைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ‘இந்தியன்-2’ படம் உருவாகி உள்ளது.

இப்படம் ஜூலை 12-ல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இப்படத்தில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, பிரியா பவானி ஷங்கர் போன்றோர் நடித்துள்ளனர். இசை - அனிருத். ஒளிப்பதிவு - ரவி வர்மன்.

இந்நிலையில் படக்குழுவினர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அதில் கமல் பேசியதாவது:

“இந்தியன் - 3 எனக்கு பிடிக்கும் என சொன்னதால், இந்தியன் - 2 பிடிக்காது என அர்த்தம் கிடையாது. நான் இந்தியன் - 3 படத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறேன். அதனை யாராலும் தடுக்க முடியாது. ஷங்கரே நினைத்தாலும் தடுக்க முடியாது.

இந்தியன் - 3 படத்தை நானா எடுக்கச்சொன்னேன்? எடுத்துவிட்டீர்கள். இப்போது எனக்கு அதன் மேல் ஆசை வந்துவிட்டது. நேதாஜியின் வீரத்தை ஒட்டுமொத்தமாக மறக்க வேண்டிய அவசியம் கிடையாது. அதேபோல் காந்தியின் பொறுமையையும் ஒட்டுமொத்தமாக இழக்க வேண்டிய அவசியம் கிடையாது. இதை எப்படி இணைக்க வேண்டும் என்பதை பார்க்க வேண்டும்.

காந்தி மட்டும் தான் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித் தந்தார் என்று கூறமுடியாது, அனைவரும் சேர்ந்ததால் தான் சுதந்திரம் கிடைத்தது. ஒரு பக்கம் வன்முறை தாக்குதலும் இருந்தது. ஒரு பக்கம் அஹிம்சை தாக்குதலும் இருந்தது” என்றார்.