சிம்பொனி என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொண்டு பிறகு அதை உருவாக்குமாறு லிடியன் நாதஸ்வரனிடம் தான் சொன்னதாக இளையராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரம். லண்டனில் இளையராஜா வெளியிட்ட சிம்பொனி நாடு முழுக்கப் பேசுபொருளாக இருந்த நிலையில், லிடியன் நாதஸ்வரம் தான் சிம்பொனியை வெளியிடவிருப்பதாக அறிவித்து ஒரு காணொளியை வெளியிட்டார்.
மேலும், நீயும் சிம்பொனி இசைப்பாய் என தன்னையும் இளையராஜா ஊக்கப்படுத்தியதாக அந்தக் காணொளியில் லிடியன் நாதஸ்வரம் கூறியிருந்தார். இந்நிலையில் லிடியன் நாதஸ்வரனிடம் சிம்பொனி குறித்து தான் கூறியதை விளக்கியுள்ளார் இளையராஜா.
"லிடியன் நாதஸ்வரம் என்னிடம் பாடம் கற்றுக்கொள்ள வந்த இசைக் கலைஞர் தான். ஒருமுறை, தான் சிம்பொனியை உருவாக்கியுள்ளதாக பிரோகிராம் செய்யப்பட்ட இசையை வாசித்துக் காண்பித்தார். 20, 30 விநாடிகள் கடந்தவுடனே திரைப்பட பின்னணி இசையைப்போல உருவாக்கியிருக்கிறாயே, இது தவறு என்று கூறினேன். இது சிம்பொனி கிடையாது, முதலில் சிம்பொனி என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொண்டு பிறகு சிம்பொனியை உருவாக்கு என்றுதான் சொன்னேன்.
பின்னணி இசையைப்போல ஒன்றை உருவாக்கிக் கொண்டு சிம்பொனியை உருவாக்கியிருப்பதாகச் சொல்லி என்னுடைய அங்கீகாரத்துக்காக இசைத்ததைப்போல இருந்தது. எனவே, இதை நிறுத்துமாறு கூறி சிம்பொனி என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொண்டு அதை உருவாக்குமாறு தான் கூறினேன். நல்ல வழியைக் காட்ட வேண்டும் அல்லவா.
என்னை முன்னுதாரணமாக வைத்துக்கொள்ள வேண்டாம். நான் என்னுடையக் காலில் நடந்து வந்து படிப்படியாக கச்சேரிகளுக்கு வாசித்து, நாடகங்களுக்கு வாசித்து, சினிமாவிலும் உதவியாளராகப் பணிபுரிந்து, வேலை பார்த்த நேரத்திலேயே கற்றுக்கொண்டு, அதைப் பரிசோதனை முயற்சியாக ஆர்கெஸ்டிராவை கொண்டு வாசிக்க வைத்து வந்துள்ளேன்.
என்னுடையக் காலிலேயே நான் நடந்து வந்து, அதுவும் வெறுங்காலில் நடந்து வந்து சினிமாவில் ஓர் இடத்தை அடைந்தேன். அதன்பிறகு, சினிமாவில் இல்லாமல் அதைவிட்டு விலகி மற்ற இசைகள் என்னென்ன உலகில் உயர்ந்து நிற்கின்றனவோ, அத்தனையையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் சிம்பொனியை உருவாக்கி வெளியிட்டேன். அதை வெறுங்காலில் நடந்து வந்து அடைந்த இடம் என்று தான் விமான நிலைய வரவேற்பில் நான் பேசியிருக்கிறேன்" என்றார் இளையராஜா.