சினிமா

தக் லைஃப் படத்தை வெளியிட மாட்டேன்: கர்நாடக விநியோகஸ்தர்

ஒரு படம் முதலிரு வாரங்களில் தான் வசூலை அள்ளும். படம் வெளியாகி ஏற்கெனவே இரு வாரங்களாகிவிட்டன.

கிழக்கு நியூஸ்

கர்நாடகத்தில் தக் லைஃப் படத்தை வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறினாலும், தான் படத்தை வெளியிட மாட்டேன் என படத்தின் விநியோகஸ்தர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழியிலிருந்து கன்னடம் உருவானதாக கமல் ஹாசன் கூறியதால் எழுந்த சர்ச்சை காரணமாக, தக் லைஃப் கர்நாடகத்தில் வெளியாகவில்லை. கர்நாடக திரைப்பட வர்த்தகச் சபையும் கமல் ஹாசன் மன்னிப்பு கேட்காத வரை படத்தை கர்நாடகத்தில் திரையிடப்போவதில்லை என அறிவித்தது.

இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தணிக்கை சான்றிதழைப் பெற்ற பிறகு ஒருவர் படத்தை வெளியிட விரும்பினால், அவர் படம் திரையிடப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தது.

தக் லைஃப் படத்தை கர்நாடகத்தில் வெளியிடுவதற்கான உரிமைகளை வெங்கடேஷ் கமலாகரின் விஆர் ஃபிலிம்ஸ் பெற்றுள்ளது. எனினும், தக் லைஃப் படத்தைத் திரையிட உச்ச நீதிமன்றம் அனுமதித்தாலும், தான் படத்தை வெளியிடப்போவதில்லை என தக் லைஃப் படத்தின் கர்நாடக விநியோகஸ்தர் தெரிவித்துள்ளார்.

தி இந்தியன்ஸ் எக்ஸ்பிரஸிடம் வெங்கடேஷ் கூறுகையில், "தக் லைஃப் படத்தை நான் வெளியிட மாட்டேன். நான் வெளியிட மாட்டேன் என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. தக் லைஃப் படத்துக்கான விநியோக உரிமையை நான் தான் பெற்றுள்ளேன். ஒரு படம் முதலிரு வாரங்களில் தான் வசூலை அள்ளும். படம் வெளியாகி ஏற்கெனவே இரு வாரங்களாகிவிட்டன. தமிழ்நாட்டிலேயே படம் வெற்றிகரமாக ஓடவில்லை" என்றார் அவர்.

மேலும், தி நியூ இந்தியன்ஸ் எக்ஸ்பிரஸில் வெளியான செய்தியின்படி வெங்கடேஷ் கூறியதாவது "படத்தின் வசூல் குறைந்து வருகிறது. மல்டிபிளெக்ஸ்களிலும் பெரிய உற்சாகம் இல்லை. நாங்கள் எதிர்பார்த்ததில் வெறும் 30 சதவீதத்தை தான் அவர்கள் கொடுக்கிறார்கள் தயாரிப்பு நிறுவனம் படத்தை நேரடியாக வெளியிடத் திட்டமிட்டால், வேறொரு விநியோகஸ்தர் மூலம் தான் வெளியிட வேண்டும். ஆனால், நிலுவைத் தொகையை சரி செய்த பிறகே அவர்களால் இந்த முடிவை எடுக்க முடியும். எங்களுடைய அனுமதி இல்லாமல் படத்தை வேறொருவரால் வெளியிட முடியாது. தயாரிப்பாளர் தரப்பு அல்லது மல்டிபிளெக்ஸ்கள் தரப்பிலிருந்து கர்நாடக வெளியீடு குறித்து எந்தத் தகவலும் இல்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இப்படத்தை இனியும் வெளியிட விருப்பம் இல்லை" என்றார் அவர்.