சினிமா

மொட்டை அடித்துக்கொண்ட நடிகை சாந்தி ப்ரியா: உருக்கமான காரணம்

"ஒருவர் இப்படிதான் இருக்க வேண்டும், அப்படி தான் இருக்க வேண்டும் என்கிற மனநிலையை வைத்துக்கொள்ளாதீர்கள்"

கிழக்கு நியூஸ்

நடிகை சாந்தி ப்ரியா மொட்டையடித்துக்கொண்டு புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளது சமூக ஊடகங்களில் கவனம் பெற்றுள்ளது.

தமிழில் எங்க ஊர் பாட்டுக்காரன் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சாந்தி ப்ரியா(55). இவர் பானுபிரியாவின் சகோதரி. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நிறைய படங்களில் நடித்து பிரபலமானவர் சாந்தி ப்ரியா. தமிழில் சமீபத்தில் - பேட் கேர்ள் படத்தில் நடித்துள்ளார் சாந்தி ப்ரியா.

இவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பிளேசர் அணிந்திருந்தபடி, முழுவதுமாக மொட்டையடித்துக்கொண்டு புகைப்படங்களைப் பதிவேற்றியிருந்தார். இவருடைய கணவர் சித்தார்த் ரே 2004-ல் காலமானார். அவருடைய நினைவாக அவரது பிளேசரை அணிந்தபடி, இந்தப் புகைப்படங்களைப் பதிவேற்றியுள்ளார்.

மொட்டை அடித்ததின் பின்னணியில் உள்ள காரணத்தைக் குறிப்பிட்டுள்ள அவர், "அண்மையில் நான் தலைமுடியை எடுத்துக்கொண்டேன். இந்த அனுபவம் அற்புதமாக இருந்தது. பெண்களாக வாழ்க்கையில் நாம் அடிக்கடி கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறோம். விதிகளுக்குள்பட்டு நடப்பதாக நம்மை நாமே கூண்டுக்குள் அடைத்துக்கொள்கிறோம்.

இந்த மாற்றத்தின் மூலம் என்னை நானே விடுவித்துக் கொண்டேன். அழகுக்கான இலக்கணங்களை மிகுந்த துணிச்சலுடன் நம்பிக்கையுடனும் உடைத்துள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவின் கீழ் தென்னிந்தியர்களின் அழகே அவர்களுடைய நீண்ட முடி தான் என்று பயனர் ஒருவர் கமெண்ட் செய்திருந்தார். இதற்குப் பதிலளித்த சாந்தி ப்ரியா, "ஒருவர் இப்படிதான் இருக்க வேண்டும், அப்படி தான் இருக்க வேண்டும் என்கிற மனநிலையை வைத்துக்கொள்ளாதீர்கள்" என்றார்.