ஜிவி பிரகாஷின் விவாகரத்துக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என நடிகை திவ்யபாரதி விளக்கமளித்துள்ளார்.
பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷும் பிரபல பாடகி சைந்தவியும் 2013-ல் காதல் திருமணம் செய்துகொண்டார்கள். எனினும் 11 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாகக் கடந்த வருடம் இருவரும் அறிவித்தது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இருவருக்கும் அன்வி என்கிற மகள் உண்டு. பிரிந்த பிறகும் ஜிவியின் இசை நிகழ்ச்சியில் சைந்தவி கலந்துகொண்டு பாடினார். விவாகரத்து தொடர்பான நீதிமன்ற விசாரணைக்கும் இருவரும் ஒரே காரில் வந்து சென்றார்கள். இதனால் இருவரும் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றார்கள்.
இவர்களுடைய விவகாரத்து பரஸ்பர முடிவாக இருந்தாலும், ஜிவி பிரகாஷின் விவாகரத்துக்கு அவருடன் பேச்சுலர் படத்தில் ஜோடியாக நடித்த திவ்ய பாரதி தான் காரணம் என்றும் இருவரும் காதலித்து வருவதாகவும் சமூகவலைத்தளங்களில் வதந்திகள் பரவி வந்தன.
கடந்த மாதம் வெளியான கிங்ஸ்டன் பட ப்ரமோஷனின்போது, இண்டியா கிளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் ஜிவி பிரகாஷ் இதுகுறித்து விளக்கமளித்தார்.
"நானும் திவ்யபாரதியும் காதலிப்பதாக வதந்தி உருவானது. எங்கள் இருவருக்குமிடையே எந்த உறவும் இல்லை. படப்பிடிப்புத் தளத்தில் தான் நான் அவரைப் பார்ப்பேன். பேச்சுலர் படம் நன்றாகப் போனதால் மக்கள் அதுபோலப் பேசுகிறார்கள்" என்றார் ஜிவி பிரகாஷ்.
நடிகை திவ்ய பாரதி தன்னுடைய விளக்கத்தில், ஜிவி பிரகாஷ் - சைந்தவி விவாகரத்துக்கு என்னை இலக்காக்குவார்கள் என்று நான் எண்ணவேயில்லை. எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. விவாகரத்து அறிவிப்பு வந்தபிறகு எல்லோரும் சம்பந்தமே இல்லாமல் என் பக்கம் திரும்பினார்கள். இந்த அவதூறைப் பரப்புபவர்களால் அவர்கள் குடும்பத்தில், உறவினர்கள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதே தெரியாது. எங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதைச் சரியாகச் சொல்வது போல எப்படிப் பேசுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
இந்தச் சர்ச்சை ஓய்ந்ததாக நினைத்த நிலையில், நடிகை திவ்யபாரதி இன்ஸ்டகிராம் பக்கத்தில் இதுகுறித்து மீண்டும் விளக்கமளித்துள்ளார்.
"ஜிவி பிரகாஷின் குடும்பப் பிரச்னைக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. நான் ஒருபோதும் ஒரு நடிகருடனோ திருமணமான நபருடனோ நேரத்தை செலவிடமாட்டேன். ஆதாரமற்ற வதந்திகள் என்பதால் இதுவரை அமைதி காத்து வந்தேன். ஆனால், இது எல்லையைக் கடந்து செல்கிறது. வெறுப்பைப் பரப்புவதை நிறுத்துங்கள். என் எல்லைகளுக்கு மதிப்பளியுங்கள். இவ்விவகாரம் தொடர்பாக இதுவே என் முதல் மற்றும் கடைசி கருத்து" என்று திவ்யபாரதி தனது இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளார்.