நடிகை ஹன்சிகா மோத்வானி மீது காவல்நிலையத்தில் வன்கொடுமை புகார் அளித்துள்ளார் தொலைக்காட்சி நடிகையும், அவரது சகோதரரின் மனைவியுமான முஸ்கான் நான்சி ஜேம்ஸ்.
பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானிக்குப் பிரசாந்த் மோத்வானி என்கிற சகோதரர் உள்ளார். கடந்த 2020-ல் பிரசாந்த் மோத்வானிக்கும், தொலைக்காட்சி நடிகை முஸ்கான் நான்சி ஜேம்ஸ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2022-ல் இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர்.
இந்நிலையில், மும்பையில் உள்ள அம்போலி காவல்நிலையத்தில் ஹன்சிகா, அவரது சகோதரர் பிரசாந்த், அவர்களின் தாய் மோனா மோத்வானி ஆகியோர் மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகள் 34, 323, 498-ஏ, 504 மற்றும் 506 ஆகியவற்றின் கீழ் கடந்த டிச.18-ல் வழக்குப் பதிவு செய்துள்ளார் முஸ்கான் நான்சி ஜேம்ஸ்.
அம்போலி காவல்நிலையத்தில் பதியப்பட்ட எஃப்.ஐ.ஆரில்., ஹன்சிகாவும், அவரது தாய் மோனாவும் தன்னுடைய இல்வாழ்க்கையில் குறுக்கிடுவதாகவும், தன் கணவருடனான உறவை கெடுத்ததாகவும் புகார் அளித்துள்ளார் நான்சி. அத்துடன் தன் கணவர் பிரசாந்த் வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
தன் கணவர் குடும்பத்தினர் செய்த வன்கொடுமைகள் காரணமாக, தனக்குப் பெல்ஸ் பால்சி (ஒரு பக்க முக பக்கவாதம்) பிரச்னை ஏற்பட்டதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார் நான்சி. இந்த விவகாரம் தொடர்பாக ஹன்சிகாவும், பிரசாந்தும் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.