இசையமைப்பாளா் ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவி அகியோருக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் பாடகி சைந்தவி இருவரும் கடந்த 2013-ல் திருமணம் செய்து கொண்டனர். காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2024-ல் பிரிவதாக அறிவித்தனர். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து இருவரும் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த மாா்ச் 24 அன்று மனு தாக்கல் செய்தார்கள். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்து இருவரும் முடிவெடுக்க 6 மாத கால அவகாசம் கொடுத்தது.
இதையடுத்து 6 மாத கால அவகாசம் முடிந்து, சென்னை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வசுந்தரி முன் இந்த வழக்கு கடந்த செப்டம்பர் 25 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜி.வி. பிரகாஷ், சைந்தவி ஆகியோா் நேரில் ஆஜராகினர். தாங்கள் சோ்ந்து வாழ விரும்பவில்லை, பிரிந்து வாழ விரும்புவதாக இருவரும் தனித்தனியாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர். அப்போது, குழந்தையை சைந்தவி கவனித்துக்கொள்வதில் தனக்கு ஆட்சேபனை இல்லை என்று ஜி.வி. பிரகாஷ் தெரிவித்தார். இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, விவாகரத்து கோரிய வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தார். இந்த நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவி இருவருக்கும் விவாகரத்து வழங்கப்படுவதாக சென்னை குடும்ப நல நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.