சசிகுமார் 
சினிமா

கதாநாயகனாக இருப்பது கஷ்டம்: சூரியை எச்சரித்த சசிகுமார்

“தோல்வியைக் கண்டு யாரும் பயப்படக்கூடாது. தோல்வியை ஒப்புக்கொண்டால் தான் வெற்றி பெற முடியும்”.

யோகேஷ் குமார்

சூரி கதையின் நாயகனாக மாறிவிட்டார் என நடிகர் சசிகுமார் பேசியுள்ளார்.

கடந்த மே 31 அன்று துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார் உட்பட பலர் நடிப்பில் வெளியான படம் கருடன். முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் இதுவரை ரூ. 40 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது. இதில் சூரி, சசிகுமார், படத்தின் தயாரிப்பாளர் வெற்றிமாறன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய சசிகுமார், “இனி யாரும் பரோட்டா சூரி என்ற பெயரை சொல்லமாட்டார்கள்” என்றார்.

சசிகுமார் பேசியதாவது:

“இதை சக்சஸ் விழா என சொல்ல வேண்டாம், நன்றி தெரிவிக்கும் விழா என்றே கூறலாம் என்றேன். ஏனென்றால், இப்போதெல்லாம் ஓடாத படங்களுக்குதான் சக்சஸ் விழா நடத்துவதாக ஒரு பேச்சு இருக்கிறது. இதற்கான காரணம் தோல்வியைக் கண்டு பயப்படுவதுதான். தோல்வியைக் கண்டு யாரும் பயப்படக்கூடாது. தோல்வியை ஒப்புக்கொண்டால் தான் வெற்றி பெற முடியும். படத்தின் தோல்விக்கு ஒரு காரணம் தான் இருக்கும், ஆனால் படத்தின் வெற்றிக்கு பல காரணங்கள் இருக்கும். என்னை பொறுத்தவரை படத்தின் வெற்றிக்கு காரணம் தயாரிப்பாளர் குமார் தான். அவர் ஆரம்பம் முதல் இப்படத்துக்காக அதிகமாக உழைத்தார்.

சூரி கதையின் நாயகனாக மாறிவிட்டார். இனி யாரும் பரோட்டா சூரி என்ற பெயரை சொல்லமாட்டார்கள். கதையின் நாயகனாக இருக்கும் வரை அவருக்கு வெற்றி தான். கதாநாயகனாக இருப்பதுதான் கஷ்டம். பாத்து இருந்துக்கோ. சூரியின் வெற்றி எனது வெற்றி போல் இருந்தது. துரை செந்தில்குமார் மிகவும் பொறுமையானவர், அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்” என்றார்.