கேஎஸ் ரவிகுமார் மற்றும் ஜெயகுமார் 
சினிமா

கே.எஸ். ரவிகுமார் தெருவில் நடமாட முடியாது: ஜெயக்குமார் சாடல்!

Madhavan

படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தை தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் தொடர்புபடுத்தி இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் பேசிய நிலையில் இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில் கடந்த 1999-ம் ஆண்டு வெளியான படம் படையப்பா. இதில் நீலாம்பரி எனும் கதாப்பாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். சமீபத்தில் முத்து திரைப்படம் மறு வெளியீடு செய்யப்பட்டது. அதில் கலந்துகொண்டு பேசிய ரவிகுமார், ஜெயலலிதாவை மனதில் வைத்தே நீலாம்பரி கதாப்பாத்திரத்தை எழுதியதாகத் தெரிவித்திருந்தார்.

மேலும், ரஜினி - ஜெயலலிதா இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் குறித்தும் பேசியிருந்த ரவிகுமார், அதன் அடிப்படையிலேயே நீலாம்பரி கதாபாத்திரத்தின் குணாதிசயங்களை வடிவமைத்ததாகத் தெரிவித்திருந்தார்.

கே.எஸ். ரவிகுமாரின் இப்பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

புரட்சித் தலைவி அம்மா அவர்களைப் பற்றி கே.எஸ். ரவிகுமார் பேசியதை எந்தவொரு அதிமுக தொண்டனாலும் தமிழக மக்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். படையப்பா படம் வந்தபோது அம்மாவின் ஆட்சி நடந்துகொண்டிருந்தது. அப்போது, இந்தக் கருத்தை சொல்லிவிட்டு ரவிகுமாரால் நடமாடியிருக்க முடியுமா? ஜெயலலிதா இப்போது இல்லை என்பதால் இப்படி ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். இவ்வாறு தொடர்ந்து பேசினால் அவர் தெருவில் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்படும் என்றார்.