படம்: https://www.youtube.com/watch?v=qeVfT2iLiu0
சினிமா

கூலியில் ஆச்சர்யப்படுத்திய நடிகை: யார் இந்த ரச்சிதா ராம்? | Rachita Ram

கன்னட சினிமாவில் டிம்பிள் அரசி என்று பிரபலமாக அழைக்கப்படுவார்.

கிழக்கு நியூஸ்

ரஜினியின் கூலி படத்தில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ரத்தம் தெறிக்க ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் நடிகை ரச்சிதா ராம். கர்நாடகத்திலிருந்து ஏற்கெனவே ஒரு ரச்சிதா தமிழ்நாட்டில் பிரபலமாக உள்ள நிலையில் இன்னொரு ரச்சிதா அதே மண்ணிலிருந்து வந்துள்ளார்.

1992-ல் பெங்களூருவில் பிறந்த ரச்சிதா ராம், கன்னட சினிமாவில் டிம்பிள் அரசி என்று செல்லமாக அழைக்கப்படுபவர்.

ரச்சிதா ராமின் குடும்பம் கலைப் பாரம்பரியம் கொண்டது. தந்தை கேஎஸ் ராம் பரதநாட்டியக் கலைஞர். இவருடைய சகோதரி நித்யா ராமும் சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வலம் வந்துகொண்டிருக்கிறார்.

2012-ல் பிரபல தொலைக்காட்சி நாடகமான அரசி மூலம் நடிகையானார் ரச்சிதா ராம். அடுத்த ஆண்டு புல் புல் படம் மூலம் திரைத் துறையிலும் அறிமுகமானார்.

சக்ரவியூஹா, புஷ்பகா விமானா, அயோக்யா, மான்சூன் ராகா போன்ற படங்களில் கூடுதல் புகழை அடைந்த ரச்சிதா ராம், இதுவரை 30-க்கும் மேற்பட்ட கன்னடப் படங்களில் நடித்துள்ளார். 2015-ல் ஃபிலிம்ஃபேர் விருதை வென்றார்.

முதல் 7 வருடங்களில் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்த ரச்சிதா ராம் - ஆயுஷ்மான் பவ, புஷ்பகா விமானா, 100, அயோக்யா போன்ற படங்களில் துணிந்து வித்தியாசமான வேடங்களில் நடித்தார். மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க முன்வந்ததால் தான் சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி தேசிய விருதைப் பெற்றார் என்று தன்னுடைய முயற்சிகளுக்கு ரச்சிதா ராம் விளக்கம் அளித்தார். 2021-ல் சூப்பர் மச்சி என்கிற தெலுங்குப் படத்தில் நடித்தார். இப்போது அவருடைய ஊரைச் சேர்ந்த ரஜினியுடன் இணைந்து கூலியில் நடித்து முதல் தமிழ்ப் படத்திலேயே முத்திரை பதித்துள்ளார்.

Rachita Ram | Coolie | Coolie Movie | Rajinikanth | Lokesh Kanagaraj | Kannada Actress |