ஃபஹத் ஃபாசில்  
சினிமா

ஃபஹத் ஃபாசிலுக்கு ஏடிஹெச்டி குறைபாடு

யோகேஷ் குமார்

ஏடிஹெச்டி (Attention-deficit/hyperactivity disorder) என்ற குறைபாட்டால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகர் ஃபஹத் ஃபாசில் பேசியுள்ளார்.

கேரளாவின் எர்ணாகுளம் பகுதியின் கோதமங்கலம் அருகே உள்ள கிராமத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஒரு பள்ளியை திறந்துவைத்துள்ளார் நடிகர் ஃபஹத் ஃபாசில்.

இதில் “ஏடிஹெச்டி என்ற குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளேன்” என அவர் பேசியுள்ளார்.

ஃபஹத் ஃபாசில் பேசியதாவது:

“எனக்கு ஏடிஹெச்டி என்ற குறைபாடு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அது பெரிய பிரச்னை இல்லை என்றாலும், அதற்கென சில குணாதிசயங்கள் உண்டு. நான் மருத்துவரிடம் 41 வயதில் இந்த குறைபாட்டை குணப்படுத்த முடியுமா என்று கேட்டேன். அதற்கு அவர், சிறுவயதாக இருந்தால் இந்த நோயை உடனடியாக குணப்படுத்திவிடலாம் என்றார். நான் அதனை சரிசெய்ய சிகிச்சை பெற்று வருகிறேன்” என்றார்.

ஏடிஹெச்டி என்பது மூளையின் நரம்பியல் தொடர்புடைய பிரச்னை ஆகும். இது சிறுவயதிலேயே கண்டறியப்படும். ஏடிஹெச்டி பாதிப்புள்ள குழந்தைகளுக்குக் கவனக் குறைவு இருக்கும். துறுதுறுவென இருப்பார்கள். மேலும், அவர்களின் செயல்களைக் கட்டுப்படுத்துவதும் கடினம் என்று கூறப்படுகிறது. ‘இந்தக் குறைபாடு இருப்பதைக் குழந்தைப் பருவத்திலேயே கண்டுபிடித்துவிட்டால், சரிசெய்துவிடலாம்' என்கிறார்கள் மருத்துவர்கள்.