‘ஏவம்’ கார்த்திக்  
சினிமா

அவதூறு காணொளிகளை நீக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவிட்டதாக ‘ஏவம்’ கார்த்திக் தகவல்

யோகேஷ் குமார்

தனக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட நேர்காணல் அனைத்தையும் நீக்க சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ‘ஏவம்’ கார்த்திக் தெரிவித்துள்ளார்.

பாடகியும், கார்த்திக் குமாரின் முன்னாள் மனைவியுமான சுசித்ரா கடந்த மே மாதத்தில் சில யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல் அளித்திருந்தார். இதில், கார்த்திக் குமார் குறித்தும் தமிழ்த் திரைத் துறை குறித்தும் ஏராளமான குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் அவர் முன்வைத்திருந்தார்.

இந்நிலையில், நேர்காணலில் தான் கூறிய கருத்துகள் அனைத்தையும் உடனடியாகத் திரும்பப் பெற்று, பொது மன்னிப்பை வெளியிட வேண்டும் என்று சுசித்ராவுக்கு கார்த்திக் நோட்டீஸ் அனுப்பினார்.

மேலும், சுசித்ரா பேசியது தன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால், ரூ. 1 கோடி மான நஷ்டஈடு வழங்க கோரி, நடிகர் கார்த்திக் குமார் வழக்கு தொடர்ந்தார்.

இதைத் தொடர்ந்து கார்த்திக் குமார் குறித்து அவதூறான கருத்துகளை தெரிவிக்க பாடகி சுசித்ராவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் பிறகு தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஏராளமான குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் முன்வைத்ததில் குறிப்பிட்ட யூடியூப் சேனல்களுக்கும் பங்குள்ளது, இதை சமூக வலைத்தளங்கள் மூலம் சரிசெய்ய முடியாது, எனவே நீதிமன்றத்தை நாடியுள்ளதாக கார்த்திக் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தனக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட நேர்காணல் அனைத்தையும் நீக்க சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், இந்த கடினமான சூழலில் தனக்கு உதவியாக இருந்த நீதிமன்றத்துக்கு நன்றி என்றும் தெரிவித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.