இயக்குநர் ஷங்கரின் ரூ. 10.11 கோடி மதிப்புடைய 3 அசையா சொத்துகள் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் முடக்கப்பட்டுள்ளது.
சென்னை மண்டலத்தைச் சேர்ந்த அமலாக்கத் துறை அலுவலகம் ஷங்கரின் சொத்துகளை முடக்கியுள்ளது.
சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மே 19, 2011-ல் அரூர் தமிழ்நாடன் என்பவர் ஷங்கருக்கு எதிராகப் புகாரளித்துள்ளார். அந்தப் புகாரில், ஷங்கர் இயக்கிய எந்திரன் படத்தின் கதை, அரூர் தமிழ்நாடன் எழுதிய ஜூகிபா கதையிலிருந்து திருடி எடுக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எனவே, காப்புரிமைச் சட்டத்தை மீறியதற்கு ஷங்கர் பொறுப்பு என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணையை மேற்கொண்டது.
அமலாக்கத் துறை விசாரணையில் கதையை மேம்படுத்தியதற்கு, திரைக்கதை, வசனங்கள் மற்றும் இயக்கம் என பன்முகப் பங்களிப்புக்காக ஷங்கர் ரூ. 11.5 கோடியைப் பெற்றுள்ளார். ஜூகிபா கதை மற்றும் எந்திரன் கதையில் ஒற்றுமை இருப்பதாக எஃப்டிஐஐ அமைப்பு சுயாதீன அறிக்கையை வெளியிட்டது. கிடைத்துள்ள ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் காப்புரிமைச் சட்ட விதிகளை ஷங்கர் மீறியதாகக் கூறி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
ரஜினிகாந்த், ஐஷ்வர்யா நடிப்பில் 2010-ல் வெளியான எந்திரன் திரைப்படம் 290 கோடி அளவில் வசூலை அள்ளியது.