பரபரப்பு நேரத்திலும் படிப்புக்கு உதவிய சிவகார்த்திகேயன்: இயக்குநர் நெகிழ்ச்சிப் பதிவு 
சினிமா

பரபரப்பு நேரத்திலும் படிப்புக்கு உதவிய சிவகார்த்திகேயன்: இயக்குநர் நெகிழ்ச்சிப் பதிவு | Sivakarthikeyan |

சிவா செய்தது கோடி ரூபாய் உதவி அல்ல… ஆனால்...

கிழக்கு நியூஸ்

பராசக்தி வெளியீட்டுக்கு முந்தைய நாள் பரபரப்பான நேரத்திலும் கல்லூரி மாணவியின் படிப்பு செலவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் உதவி செய்தது குறித்து இயக்குநர் இரா. சரவணன் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நந்தன், கத்துக்குட்டி, உடன்பிறப்பே உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இரா. சரவணன். கடந்த ஜனவரி 17 அன்று இவர் எழுதிய சங்காரம் நாவல் வெளியானது. இதற்கிடையில் இரா. சரவணன் சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயனைப் பற்றிப் பகிர்ந்துள்ள நெகிழ்ச்சியான பதிவு கவனம் ஈர்த்துள்ளது.

சிவகார்த்திகேயனுக்கு இரா. சரவணன் பாராட்டு

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜனவரி 10 அன்று பராசக்தி படம் வெளியானது. இப்படத்திற்குத் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கத் தாமதம் செய்ததால் படத்தின் வெளியீடு தொடர்பாக பல சிக்கல்கள் இருந்தன. இதற்கிடையில் வெளியீட்டுக்கு முந்தைய நாள் கல்லூரி மாணவி ஒருவரது படிப்புச் செலவுக்காக உதவக் கோரியதாகவும், படம் வெளியீட்டுக்கு முந்தைய நாள் பரபரப்புக்கு நடுவிலும் சிவகார்த்திகேயன் அந்த மாணவிக்கு உதவியதாகவும் இயக்குநர் இரா. சரவணன் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.

இரா. சரவணனின் நெகிழ்ச்சிப் பதிவு

அதில் அவர் கூறியிருப்பதாவது: “தம்பி சிவகார்த்திகேயனை எத்தனையோ முறை பார்த்தாலும், பேசி இருந்தாலும் அவரோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டது இல்லை. இந்த முறை எடுக்கத் தோன்றியது. அதற்குக் காரணம் இருந்தது. ‘சங்காரம்’ நாவல் குறித்து அறிந்திருந்த சிவா, “எனக்கும் அறிவு இருக்குண்ணே… நாங்களும் புக் படிப்போம்” எனக் குறுந்தகவல் அனுப்பி என்னைச் சீண்டி இருந்தார். ஒரு தனித்திரையிடல் நிகழ்விற்கு சிவா வருவதாகச் சொல்ல, சந்திக்கப் போயிருந்தேன். தம்பி வந்ததும் கைக்குலுக்கி, தகப்பனைப் பறிகொடுத்த ஒரு மகளின் படிப்பு செலவை ஏற்று உதவிய அவருடைய அக்கறைக்கு நன்றி கூறினேன். டாபிக் மாற்றிய சிவகார்த்திகேயனை முதன் முறையாய்க் கெட்டியாய்க் கட்டிக்கொண்டேன். நன்றியை ஏற்காத அவர் குணமும், நமக்குப் போக்குக் காட்டும் அவர் சேட்டையும் வழக்கமானதுதான்.

பரபரப்பு நேரத்திலும் உதவி

‘பராசக்தி’ ரிலீஸ் நேரம்… சென்ஸார் உள்ளிட்ட பல சிக்கல். அந்த நேரத்தில் எனக்கு ஓர் அழைப்பு. கேட்கையிலேயே நெஞ்சு அடைத்து மீண்டது. ஒரு கல்லூரி மாணவியின் கண்ணீர். “சமஸ்டர் ஃபீஸ் கட்ட இன்னும் இரண்டு நாட்களே அவகாசம் சார்…” அந்த மாணவி சொல்லி முடிக்கும்போதே, சிவகார்த்திகேயன்தான் கண்ணில் வந்தார். ஆனால், ‘பராசக்தி’ ரிலீஸ் நேரமாயிற்றே… வேறு ஆட்களை அணுகலாம் எனப் பத்துக்கும் மேற்பட்ட நண்பர்களுக்கு போன் பண்ணியும் பலனில்லை. தம்பி சிவாவிற்கே குறுந்தகவல் அனுப்பினேன். மின்னலென தம்பி நவனீதன் தொடர்புக்கு வந்தார். “நாளைக்கு படம் ரிலீஸ்ணே… இப்போ சொல்றீங்களே” என்றவர் அந்த மாணவியின் எண் வாங்கி, பேசி, டி.டி எடுத்து கல்லூரிக்கு அனுப்பி இரவு 11:30 மணிக்கு எனக்கு போன் பண்ணினார். உதவி கேட்ட நானே தூங்கிவிட்டேன். அந்த நேரத்தில் நவனீதன் அழைத்து ஃபீஸ் கட்டிவிட்ட விவரத்தைச் சொன்னார். “நன்றி அண்ணா…” என ஃபீஸ் கட்டப்பட்ட விவரத்துடன் அந்த மாணவி அனுப்பிய குறுந்தகவலும் வந்திருந்தது.

குடும்பத்தின் நன்றியைக் கடத்தினேன்

மிக நெருக்கடியான நேரத்தில் சட்டென உதவிய சிவகார்த்திகேயனுடன் முதல் முறையாய் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பினேன். “அண்ணே…” என என் கைகளை அழுந்தப் பிடித்துக் கொண்டார் சிவா. அவர் கைகளின் வழியே அந்தக் குடும்பத்தின் ஆத்மார்த்த நன்றியைக் கடத்தினேன். நெகிழ்ந்திருந்த சிவாவிடம், ‘சங்காரம்’ நாவல் கொடுக்க விரும்பாமல், நிறைவோடு கிளம்பினேன். சிவா செய்தது கோடி ரூபாய் உதவி அல்ல… ஆனால், அடுத்த நாள் பட ரிலீஸை வைத்துக்கொண்டு ஒருவரின் கவலை குறித்துக் கேட்கிற மனம் நிச்சயமாகக் கோடிக்குச் சமம்!” என்று பதிவிட்டுள்ளார்.

Director R. Saravanan has posted a touching post about actor Sivakarthikeyan on his help for a college student with her education expenses during the hectic time leading up to the release of Parasakthi.