புஷ்பா 2 சாதனையை நோக்கி வெற்றிநடைபோடும் துரந்தர். 
சினிமா

வசூல் சாதனையில் உச்சம் தொடும் துரந்தர்! | Dhurandhar |

ஹிந்தி மொழியில் மட்டும் புஷ்பா 2 ரூ. 812 கோடியை நிகர வசூலாகக் குவித்துள்ளது.

கிழக்கு நியூஸ்

ரன்வீர் சிங்கின் துரந்தர் திரைப்படம் பாலிவுட்டில் வசூல் சாதனையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

ரன்வீர் சிங் நடிப்பில் ஆதித்யா தர் இயக்கியுள்ள ஸ்பை த்ரில்லர் படம் துரந்தர். அக்‌ஷய் கண்ணா, சஞ்சய் தத், மாதவன், அர்ஜுன் ராம்பால் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளார்கள். இப்படம் டிசம்பர் 5 அன்று வெளியானது. இந்தியா முழுக்க இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் காரணமாகவே வசூலில் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது துரந்தர்.

வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் ஓடியதன் மூலம் புதிய மைல்கல்லைத் தொட்டிருக்கிறது துரந்தர். உள்நாட்டில் மட்டும் இப்படம் ரூ. 648.5 கோடியை வசூலித்துள்ளது. பாலிவுட் படங்களில் இந்தியாவில் மட்டும் அதிக நிகர வசூலைக் குவித்த படம் என்ற சாதனையை துரந்தர் படைத்தது. 2023-ல் அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடிப்பில் உருவான ஜவான் திரைப்படம் ரூ. 640 கோடியை வசூலித்து சாதனை படைத்திருந்தது. இச்சாதனை தற்போது முறியடிக்கப்பட்டிருக்கிறது.

பாலிவுட்டில் இதற்கு முன்பு அனிமல் (ரூ. 553 கோடி), கடார் 2 (ரூ. 525 கோடி), பதான் (ரூ. 543 கோடி) ஆகிய படங்கள் ரூ. 500 கோடியைத் தாண்டியிருந்தன. இதில் முதன்முதலாக ரூ. 500 கோடி எனும் மைல்கல்லை எட்டிய படம் ஷாருக்கானின் பதான் தான். இதற்கு முன்னதாக அமீர் கானின் டங்கல் ரூ. 387 கோடியுடன் முதலிடத்தில் இருந்தது.

உள்நாட்டிலேயே ரூ. 1,000 கோடி வசூலை புஷ்பா 2 மற்றும் பாகுபலி 2 அடைந்துள்ளது. புஷ்பா 2 எல்லா மொழிகளிலும் சேர்த்து ரூ. 1,234 கோடியும் பாகுபலி 2 எல்லா மொழிகளிலும் சேர்த்து ரூ. 1,000 கோடிக்கு மேல் அள்ளிக் குவித்துள்ளன.

ஹிந்தி மொழியில் மட்டும் புஷ்பா 2 ரூ. 812 கோடியை நிகர வசூலாகக் குவித்துள்ளது. பாகுபாலி 2 ரூ. 511 கோடியைக் குவித்துள்ளது. புஷ்பா 2 சாதனையை நோக்கி தான் துரந்தர் தற்போது வெற்றிநடை போட்டு வருகிறது.

Dhurandhar | Bollywood Collections | Hindi Film | Ranveer Singh | Pushpa 2 |