சினிமா

அஜித் குமார் ரேஸிங் அணி: விவரங்கள் வெளியீடு!

அஜித் குமார் ரேஸிங் அணிக்கு அனைத்து வகையான ஒத்துழைப்புகளையும் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பிரபல பாஸ் கோட்டென் (Bas Koeten) ரேஸிங் அணி வழங்கும்.

ராம் அப்பண்ணசாமி

கார் ரேஸிங்கில் மீண்டும் களமிறங்கும் நடிகர் அஜித்தின் ‘அஜித் குமார் ரேஸிங்’ அணியின் லோகோவும், பிற விவரங்களும் வெளியாகியுள்ளன.

அஜித் குமார் ரேஸிங் என்கிற புதிய ரேஸிங் அணி தொடங்கப்பட்டுள்ளதாக கடந்த செப்.27-ல் நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் அறிவித்தார். மேலும் முதல் நிகழ்வாக ஐரோப்பியா ஜிடி4 சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேஸிங் அணி பங்கேற்கும் எனவும் அவர் அறிவித்தார்.

இந்நிலையில் அஜித் குமார் ரேஸிங் அணியின் லோகோ இன்று வெளியாகியுள்ளது. மேலும், அஜித் குமார் ரேஸிங் அணியின் மேலாளராக பிரபல ரேஸிங் பயிற்சியாளர் நோயல் தாம்ஸன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அணியின் ரேஸர்களாக அஜித் குமார், ஃபேபியன் டுஃபியெக்ஸ், மாத்யூ டெட்ரி மற்றும் காம் மெக்லியாட் ஆகியோர் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் குமார் ரேஸிங் அணியின் முதல் கார் பந்தயமாக மிஷெலின் துபாய் 24H 2025 கார் பந்தயம் இருக்கும் எனவும், இதைத் தொடர்ந்து ஐரோப்பா 24H தொடர் சாம்பியன்ஷிப் மற்றும் போர்ஷ் 992 GT3 கோப்பை தொடர் ஆகியவற்றிலும் அஜித்தின் அணி பங்கேற்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அஜித் குமார் ரேஸிங் அணிக்கு அனைத்து வகையான ஒத்துழைப்புகளையும் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பிரபல பாஸ் கோட்டென் (Bas Koeten) ரேஸிங் அணி வழங்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.