டெல்லி கணேஷ் 
சினிமா

இதிலிருந்து மீள்வது மிகவும் கடினம்: டெல்லி கணேஷின் மகன் உருக்கம்

நேற்றிரவு அனைவரிடமும் நன்றாக பேசிக் கொண்டிருந்தார், ஆனால் தூக்கத்திலேயே இறந்துவிட்டார்.

யோகேஷ் குமார்

தமிழ்த் திரையுலகின் மகத்தான குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான டெல்லி கணேஷ், உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 80.

இவரின் மறைவைத் தொடர்ந்து அவரது மகன் மற்றும் மருமகன் ஆகியோர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

டெல்லி கணேஷின் மருமகன் சதீஷ் நாராயணன் பேசியதாவது

இது மிகப்பெரிய இழப்பு. கடந்த மாதம் தென்னிந்திய திரைப்பட சங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது அவருக்கு கொடுக்கப்பட்டது. வரும் செவ்வாய் அன்று அதை கொண்டாடலாம் என்று இருந்தோம், ஆனால் எதிர்பாராத விதமாக இவ்வாறு நடந்தது. எப்போதும் சினிமாவை அதிகமாக நேசிக்க கூடியவர். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட டப்பிங் வேலைகளை முடித்துவிட்டு வந்தார். அடுத்த நாள் படப்பிடிப்புக்கு தயாராகி கொண்டிருந்தார். மகன், மருமகன் என்ற வேறுபாடுகளை அவர் பார்த்ததே இல்லை. அனைவரிடமும் நன்றாக பழகக் கூடிய மிகச்சிறந்த மனிதர். தான் நேசித்த முதல் மனைவி சினிமா என்று கூறுவார். சிறந்த குணசித்திர நடிகரை சினிமா இழந்துவிட்டது. அனைவரிடமும் மகிழ்ச்சியாக பேசிவிட்டு சிரித்தப்படி உறங்க சென்றார். ஆனால் தூக்கத்திலேயே இறந்துவிட்டார். நாளை காலை 9 மணிக்கு அவரின் இறுதி ஊர்வலம் நடைபெறும்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

டெல்லி கணேஷின் மகன் மகா டெல்லி கணேஷ் பேசியதாவது

அப்பாவுக்கு சமீபத்தில் 80-வது திருமண விழா நடைபெற்றது. அதன் பிறகு வயது காரணமாக அவருக்கு சில பிரச்னைகள் இருந்தது, அதற்கான சிகிச்சைகளை அவர் மேற்கொண்டிருந்தார். நேற்றிரவு அவருக்கு மாத்திரை கொடுக்கலாம் என்று அவரை எழுப்பும்போது, எந்த அசைவும் இல்லாமல் இருந்தார், அதன் பிறகு மருத்துவர் அவர் இறந்ததை உறுதி செய்தார். உடல்நிலை சரியில்லாமல் இருந்தார் என்று மட்டுமே நாங்கள் யோசித்தோம், இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. நேற்றிரவு அனைவரிடமும் நன்றாக பேசிக் கொண்டிருந்தார். இதில் இருந்து மீள்வது மிகவும் கடினம். கடைசியாக ஒரு ஹிந்தி இணையத் தொடரில் பணியாற்றினார். மேலும், சசிகுமாருடன் ஒரு படத்தில் நடித்திருக்கிறார், அப்படம் இன்னும் வெளியாகவில்லை.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.