சினிமா

ரூ. 151 கோடி: முதல் நாள் வசூலில் சாதனை படைத்த கூலி! | Coolie

முதல் நாளில் அதிக வசூலைக் குவித்த படமாக விஜயின் லியோ கூறப்பட்டு வருகிறது. அதையும் முந்தியது ரஜினியின் கூலி.

கிழக்கு நியூஸ்

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள கூலி திரைப்படம் முதல் நாளில் ரூ. 151 கோடிக்கும் மேல் வசூலைக் குவித்து சாதனை படைத்துள்ளது.

இதன்மூலம், முதல் நாளில் உலகளவில் அதிக வசூலைக் குவித்த முதல் படம் என்ற சாதனையை ரஜினியின் கூலி படைத்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று வெளியானது கூலி திரைப்படம். படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஆமிர் கான், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் எனப் பெரிய நட்சத்திரக் கூட்டமே இருப்பதால் அதீத எதிர்பார்ப்பு இருந்தது. அனிருத் இசை படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் கிளப்பியது.

இந்நிலையில் தான் ரசிகர்களின் உற்சாக வரவேற்புக்கு மத்தியில் கூலி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வருகின்றன. ஒருபுறம் ரஜினி இளமைப் பருவத்தில் வரும் காட்சிகள் அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மறுபுறம், திரைக்கதையில் பெரிய வேலை எதுவும் பார்க்கவில்லை ஏராளமான ஓட்டைகள் உள்ளன என ரசிகர்கள் சமூக ஊடகங்களில் தங்களுடைய விமர்சனங்களைக் கொட்டி வருகிறார்கள்.

விமர்சனங்களுக்கு மத்தியிலும் ரஜினியின் கூலி உலகளவில் ரூ. 151 கோடிக்கும் மேல் வசூலை அள்ளிக் குவித்து சாதனையைப் படைத்துள்ளது.

முதல் நாளில் அதிக வசூலைக் குவித்த படமாக விஜயின் லியோ கூறப்பட்டு வருகிறது. லியோ திரைப்படம் முதல் நாளில் ரூ. 148.5 கோடி வசூலை அள்ளிக் குவித்தது. விஜய் நடித்த கோட் படத்தால்கூட இச்சாதனையை முறியடிக்க முடியாமல் போனது. கோட் திரைப்படம் முதல் நாளில் ரூ. 126.32 கோடிக்கும் மேல் வசூலைக் குவித்தது.

கூலி திரைப்படம் ரூ. 151 கோடிக்கும் மேல் வசூலை அள்ளியதன் மூலம், முதல் நாளில் ரூ. 150 கோடி வசூலைக் குவித்த முதல் தமிழ்ப் படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. அதேசமயம், முதல் நாளில் அதிக வசூலைக் குவித்த தமிழ்ப் படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது.

Coolie | Rajinikanth | Rajini | Sun Pictures | Lokesh Kanagaraj | Aamir Khan | Upendra | Nagarjuna | Shruti Haasan | Sathyaraj | Soubin | Day 1 Collection | Worldwide Collection | Coolie Collection |