சினிமா

அரசு சார்பில் இளையராஜா பெயரில் விருது: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | Ilaiyaraaja | MK Stalin |

இளையராஜாவுக்கு இந்தியாவின் உயர்ந்த பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை...

கிழக்கு நியூஸ்

இளையராஜாவின் பெயரில் தமிழக அரசின் சார்பில் இசைக் கலைஞர்களுக்கு விருது வழங்கப்படும் என்று அறிவித்த முதல்வர் ஸ்டாலின் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த இளையராஜாவுக்கான பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது :

”இசை என்னும் தேனை உலகத்துக்கே தரும் இந்த தேனிக்காரர் இளையராஜா. அவர் கலைத்தாய்க்கு மட்டுமல்ல தமிழ்த்தாய்க்கும் சொந்தமானவர். அதனால்தான் அவருக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழாவை நடத்துகிறோம். இளையராஜாவைப் பாராட்டுவதில் நாம்தான் பெருமை அடைகிறோம். இளையராஜா திரையுலகப் பயணத்தைத் தொடங்கி 50 ஆண்டுகள் ஆகிறது என்றால், நம் இதயங்களை ஆளத் தொடங்கி 100 ஆண்டு காலம் ஆகிறது.

திரைப்பயணத்தில் பொன்விழா கண்டு, சிம்பொனி இசையிலும் சிகரம் தொட்ட தோழர் இளையராஜாவுக்கு ஒட்டுமொத்த தமிழகத்தின் சார்பில் உங்களில் ஒருவனாக நான் என் வாழ்த்தைத் தெரிவிக்கிறேன். பன்னைபுரத்திலிருந்து புறப்பட்டு வந்த மனிதர், திறமையும் உழைப்பும் இருந்தால் எந்த உயரத்தையும் அடையலாம் என்று அனைவருக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் இளையராஜா. இந்த அரை நூற்றாண்டு காலத்தில் ராஜாவின் பாடல்களை முணுமுணுக்காத உதடுகளே தமிழ்நாட்டில் இருக்க முடியாது. இளையராஜாவின் இசை தாயாக தாலாட்டுகிறது. காதலின் உணர்வுகளை போற்றுகிறது. வெற்றி பயணத்திற்கு ஊக்கமளிக்கிறது. வலிகளை ஆற்றுகிறது. உண்மையைச் சொன்னால், இவர் இளையராஜா மட்டுமல்ல. இணையற்ற ராஜா.

பொதுவாக ராஜா இருந்தால் அவருக்கு நாடு இருக்கும், மக்கள் இருப்பார்கள். ஆனால் இந்த ராஜா மொழிகளையும் நாடுகளையும் எல்லைகளையும் கடந்தவர். எல்லா மக்களுக்கும் ஆனவர்.

இந்நேரத்தில் சமூக வலைத்தளத்தில் ஒருவர் எழுதிய வரிகளை எடுத்துச் சொல்ல விரும்புகிறேன். இளையராஜா மட்டும் இசையமைத்திருந்தால், திருக்குறளும் நற்றினையும் புறநானூறும், குறந்தொகையும், ஐங்குறுநூறும், பதற்றுப்பத்தும் பரிபாடலும் சிலப்பதிகாரமும் எங்களுக்கு மனப்பாடமாகி இருக்கும் என்று எழுதியிருந்தார். தமிழ் ஆர்வலனாக நானும் இளையராஜாவிடம் இதே கோரிக்கையை வைக்கிறேன். தமிழ்ப் புலமையும் இசை ஆளுமையும் கொண்ட நீங்கள், சங்கத்தமிழ் இலக்கியங்களுக்கு இசை அமைத்து சில ஆல்பங்கள் வெளியிட வேண்டும். ஏற்கெனவே தமிழ் நெஞ்சங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் உங்கள் இசை மூலம் தமிழ்ச் சுவையை அடுத்த தலைமுறைக்கு பரிமாற வேண்டும். ஏனென்றால் ராஜா கைய வெச்சா அது ராங்கா போனதில்ல என்ற நம்பிக்கையோடு இந்த கோரிக்கையை வைக்கிறேன்.

இளையராஜாவுக்கு எத்தனையோ புகழ் மகுடங்கள் இருந்தாலும் அவருடைய ஆற்றலுக்குப் பொருந்தி, என்றைக்கும் பயணிக்கும் பட்டம்தான் முன்னாள் முதல்வர் கலைஞர் வழங்கிய இசைஞானி என்ற பட்டம். அதுவே அவரது பெயராக நிலைத்துவிட்டது. வரலாற்றில் எத்தனையோ பேர் ஒரே பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் யாரும் இன்னொருத்தருக்காக தனது பிறந்தநாளை மாற்றியது கிடையாது. ஆனால் இளையராஜா தனது பிறந்தநாளை ஜூலை 2 ஆக மாற்றிக் கொண்டார். அந்த வகையில் உள்ளத்திலேயும் ராஜாவாக உயர்ந்து நிற்கிறார் இளையராஜா. அவருக்கும் கலைஞருக்கும் இருந்த நட்பு என்னால் மறக்க முடியாது. என் மகள் செந்தாமரையில் நாட்டிய அரங்கேற்றத்தில் இளையராஜா பங்கேற்று வாழ்த்தினார். அவர் லண்டனில் சிம்பொனி அரங்கேற்றப் போகிறார் என்ற செய்தி வந்ததும் அவர் வீட்டுக்கு நான் முதல் ஆளாகச் சென்று என் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தேன். ராஜா அவர்களும் சிம்பொனி சாதனையை நிறைவேற்றி, வெற்றிக் களிப்போடு என் வீட்டுக்கு வந்து என்னை பார்த்தார். இந்த அன்புக்கு நான் என்றைக்கும் கடமைப்பட்டவன்.

இந்த சிறப்பான விழாவில் ஒரு அறிவிப்பை வெளியிடாமல் நான் இருக்க முடியுமா? இசைத்துறையில் ஆர்வத்தோடு சிறந்த இசையை படைக்கிற இசை கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாகத் தமிழ்நாடு அரசின் சார்பில் இனி ஆண்டுதோறும் இளையராஜா பேரில் விருது வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். இந்த அறிவிப்போடு ஒரு கோரிக்கையும் வைக்கிறேன். இளையராஜாவின் சாதனைகளுக்கு எந்த மகுடம் சூட்டினாலும் சாதாரணம்தான். அந்த மேதைக்கு இந்தியாவின் உயர்ந்த விருதான பாரத ரத்னா விருதுவழங்கப்பட வேண்டும் என்று உங்கள் அனைவரது முன்னிலையிலும் தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை வைக்கிறேன். இது நிச்சயம் நிறைவேறும் என்று நான் நம்புகிறேன்”

இவ்வாறு அவர் பேசினார்.

Ilaiyaraaja | Ilaiyaraaja 50 | Symphony | MK Stalin |