மும்பையில் கட்டுமானத்தில் உள்ள தங்களுடைய வீட்டை தங்களுக்கே தெரியாமல் வீடியோ எடுத்து இணையத்தில் கசியவிட்டதை நடிகை ஆலியா பட் கண்டித்துள்ளார்.
ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் மும்பை பாந்த்ராவில் வசித்து வருகிறார்கள். பல அடுக்குகளைக் கொண்ட வீட்டில் இருவரும் மகள் மற்றும் நீது கபூருடன் வாழ்ந்து வருகிறார்கள். இந்த வீட்டின் மதிப்பு ரூ. 250 கோடி எனக் கூறப்படுகிறது.
இவர்களுடைய வீடு அருகிலுள்ள கட்டடத்திலிருந்து படம்பிடிக்கப்பட்டு இணையத்தில் வெளியாகியுள்ளது. இது தனியுரிமையை மீறும் செயல் என வேதனை தெரிவித்துள்ள ஆலியா பட், சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை நீக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஆலியா பட் பதிவிட்டுள்ளதாவது:
"மும்பை போன்ற நகரில் இடம் குறைவாகவே இருக்கும். சில நேரங்களில் நம் ஜன்னல்கள் வழியே மற்றவருடைய வீட்டைதான் பார்க்க முடியும்.
அதற்காக ஒருவருடைய வீட்டைப் படம்பிடித்து இணையத்தில் காணொளிகளாகக் கசியவிட யாருக்கும் உரிமை இல்லை. எங்களுடைய முன் அனுமதி மற்றும் ஒப்புதல் இல்லாமல் இன்னும் கட்டுமானத்தில் இருக்கும் எங்களுடைய வீடு, காணொளியாகப் பதிவு செய்யப்பட்டு பல்வேறு தளங்களில் கசியவிடப்பட்டிருக்கிறது.
இது மிகத் தெளிவாக தனியுரிமையை மீறும் செயல், பாதுகாப்பு சார்ந்த தீவிரப் பிரச்னை. ஒருவருடைய தனிப்பட்ட இடத்தை அனுமதி இல்லாமல் படம்பிடிப்பது, புகைப்படம் எடுப்பது கன்டென்ட் அல்ல, மீறல். இதை யதார்த்தமாக்கிவிடக் கூடாது.
உங்கள் வீட்டினுள் எடுக்கும் காணொளிகளை உங்களுக்குத் தெரியாமல் பொதுவெளியில் பகிர்ந்தால் பொறுத்துக்கொள்வீர்களா? சற்று சிந்தித்துப் பாருங்கள். யாரும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்.
எனவே, கனிவான ஆனால் உறுதியான வேண்டுகோள். இக்காணொளியை இணையத்தில் கண்டால் அதை மேற்கொண்டு பகிர வேண்டாம். ஊடக நண்பர்கள் யாரேனும் புகைப்படங்களையும் காணொளிகளையும் பயன்படுத்தியிருந்தால், அதை நீக்குமாறு வலியுறுத்துகிறேன்" என்று ஆலியா பட் குறிப்பிட்டுள்ளார்.
Alia Bhatt | Ranbir Kapoor |