சினிமா

நிவின் பாலி வழக்கில் போதிய ஆதாரம் இல்லை: காவல் துறை

சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் தேதிகளில், நிவின் பாலி சம்பவ இடத்தில் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

யோகேஷ் குமார்

நடிகர் நிவின் பாலிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

மலையாள நடிகைகளுக்கு பாலியல் ரீதியான நெருக்கடிகள் உள்ளதாக நீதிபதி ஹேமா ஆணையம் பரபரப்பு அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து மலையாள கலைஞர்கள் மீது அடுத்தடுத்து வைக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பெண் ஒருவர் அளித்த புகாரின்பேரில் நடிகர் நிவின் பாலி உள்பட 6 பேர் மீது எர்ணாகுளம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்தாக அந்த பெண் குற்றம் சாட்டியிருந்தார்.

இதைத் தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டில் தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்வேன் என நிவின் பாலி தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக இது தொடர்பான விசாரணையை சிறப்புப் புலனாய்வுக் குழு மேற்கொண்டது. இந்நிலையில் சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் தேதிகளில், நிவின் பாலி சம்பவ இடத்தில் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

எனவே, இந்த வழக்கு தொடர்பாக நிவின் பாலிக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என கொத்தமங்கலம் நீதிமன்றத்தில் காவல்துறை அறிக்கையைச் சமர்பித்துள்ளது.