சினிமா

போதைப் பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணா கைது!

இரைப்பை சார்ந்த பிரச்னைகள் உள்ளதால் தன்னால் போதைப்பொருள் பயன்படுத்த முடியாது.

ராம் அப்பண்ணசாமி

போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூன் 23-ம் தேதி, போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்தை நுங்கம்பாக்கம் காவல்துறையினர் கைது செய்தனர். தீங்கிரை படத்தை தயாரித்த மயிலாப்பூரைச் சேர்ந்த பிரசாத் என்பவர் மூலம் தனக்கு போதைப் பொருள் பழக்கம் ஏற்பட்டதாக விசாரணையின்போது அவர் வாக்குமூலம் அளித்திருந்தார்.

விசாரணைக்குப் பிறகு எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் தயாளன் முன்னிலையில் ஸ்ரீகாந்த் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே நடிகர் கிருஷ்ணாவும் போதைப் பொருளைப் பயன்படுத்தியதாகவும், வேறு சில நடிகர் நடிகைகளுக்கு அவர் போதைப் பொருளை கைமாற்றியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு காவல்துறை சம்மன் அனுப்பியது.

இந்நிலையில், நேற்று (ஜூன் 25) மாலை தனது வழக்கறிஞர்களுடன், நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் கிருஷ்ணா விசாரணைக்கு ஆஜரானார்.

அப்போது, தனக்கு இரைப்பை சார்ந்த பிரச்னைகள் உள்ளதால் தன்னால் போதைப்பொருள் பயன்படுத்த முடியாது என்றும், நடிகர் ஸ்ரீகாந்துடன் நட்புறவாகப் பழகி வந்தாலும் போதைப் பொருள்களைப் பயன்படுத்தியது இல்லை என்றும், பிரசாந்துடன் தனக்கு தொடர்பு இல்லை என்றும், அவர் வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியானது.

இதைத் தொடர்ந்து, போதைப் பொருள் உட்கொண்டதைக் கண்டறியும் வகையில் அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், விசாரணையின் முடிவில் இன்று (ஜூன் 26) கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார்.