பாபி சிம்ஹா 
சினிமா

விமர்சிப்பவர்கள் தங்களை அறிவாளியாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்: பாபி சிம்ஹா

யோகேஷ் குமார்

இந்தியன் 2 படம் பிடிக்கவில்லை என்று விமர்சிப்பவர்களைப் பற்றி கவலையில்லை என்று பாபி சிம்ஹா பேசியுள்ளார்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து 1996-ல் வெளியான படம் ‘இந்தியன்’. இப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இதைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ‘இந்தியன்-2’ படம் உருவானது.

இப்படத்தில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, பிரியா பவானி ஷங்கர் போன்றோர் நடித்துள்ளனர். இசை - அனிருத். ஒளிப்பதிவு - ரவி வர்மன்.

இப்படம் ஜூலை 12 அன்று வெளியான நிலையில் பெரும்பாலும் எதிர்மறையான விமர்சனங்களையேப் பெற்று வருகிறது.

இந்தியன் 2 படத்தில் 12 நிமிடக் காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்தது.

இந்நிலையில் சமீபத்தில் பிஹைண்ட்வுட்ஸ் பேட்டியில் பேசிய பாபி சிம்ஹா, “விமர்சிப்பவர்கள் தங்களை அறிவாளியாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்

அவர் பேசியதாவது:

“ஒரு படத்தில் அனைத்து விஷயங்களும் நினைத்தது போல் அமையாது. ஷங்கர் மீது ரசிகர்களுக்கு அதிகமான எதிர்பார்ப்பு இருப்பதால் கலவையான விமர்சனங்கள் வரலாம்.

இந்தியன் 2 படத்தைப் பார்ப்பதற்கு மக்கள் எந்த அளவுக்கு கூட்டமாக வருகிறார்கள் என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். அது தான் நமக்கு முக்கியம்.

விமர்சிப்பவர்கள் தங்களை அறிவாளியாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு விஷயம் நன்றாக உள்ளது என்று சொன்னால் அவர்களை முட்டாள் என நினைத்துவிடுவார்களோ, என்ற எண்ணத்தில் அவ்வாறு பேசுகிறார்கள்.

சாக்கு சொல்லும் வகையில் ஏதோ ஒன்றை பேசி வருகிறார்கள். அந்த அறிவாளிகளைப் பற்றியெல்லாம் கவலைப்பட தேவையில்லை” என்றார்.