பிக் பாஸ் 18 ஹிந்தி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு நடிகை ஷ்ருதிகாவுக்கு கிடைத்துள்ளது.
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட 7 மொழிகளில் ஒளிபரப்பாகிறது. முதல்முதலாக ஹிந்தியில் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக 18-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி நேற்று (அக். 6) தொடங்கியது. இதில் நடிகை ஷ்ருதிகா 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார். இதன் மூலம் பிக் பாஸ் ஹிந்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல் தமிழ் நடிகை எனும் பெருமையை பெற்றார்.
2002-ல் ஸ்ரீ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஷ்ருதிகா நள தமயந்தி, தித்திக்குதே போன்ற படங்களில் நடித்தார். 2003-க்கு பிறகு இவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இதைத் தொடர்ந்து 2022-ல் குக் வித் கோமாளி தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த இவர், தற்போது பிக் பாஸ் ஹிந்தி நிகழ்ச்சிக்கு நுழைந்தார்.
முதல் நாளில் அவரை அறிமுகம் செய்த சல்மான் கானிடம், “வணக்கம் தமிழ்நாடு” என்று கூறும்படி கோரிக்கை வைக்க, சல்மான் கானும் “வணக்கம் தமிழ்நாடு” என்று கூறினார். இது தொடர்பான காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இதைத் தொடர்ந்து ஷ்ருதிகா குழந்தைத் தனமாகப் பேசுவது அவரது இயல்புதான் அவர் நடிக்கவில்லை என்றும், அவர் பேசுவது செயற்கையாக இருக்கிறது என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.