2023-ன் சிறந்த படம் கிடா தான் என்று இயக்குநர் ஹலிதா ஷமீம் கூறியுள்ளார்.
சில்லுக் கருப்பட்டி, ஏலே போன்ற படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். மின்மினி என்கிற படத்தைத் தற்போது இயக்கி வருகிறார்.
தீபாவளி அன்று ஜப்பான், ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் ஆகிய படங்களுடன் சேர்த்து இயக்குநர் வெங்கட் இயக்கத்தில் கிடா படமும் வெளியானது. ஜப்பான், ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் படங்களுக்கு கிடைத்த கவனம் இந்தப் படத்திற்குக் கிடைக்கவில்லை.
திரையரங்குகளில் வெளிவருவதற்கு முன்பே பல திரைப்பட விழாக்களில் கிடா படம் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் கிடா படம் ஓடிடி தளத்தில் வெளியானது.
இந்நிலையில் கிடா படத்தைப் பாராட்டி இயக்குநர் ஹலிதா ஷமீம் தன்னுடைய X தளத்தில், "படம் பார்த்து அகம் சிலிர்த்தேன். இது போன்று பல படங்களை இயக்குங்கள்" என பதிவிட்டார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் இயக்குநர் வெங்கட், "உங்களை போன்ற சிறந்த இயக்குனர் இந்தப் படத்தை அங்கீகரிக்கும்போது கிடைக்கும் நிம்மதிக்கு வார்த்தைகள் கிடையாது" என்றார்.