தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெருநாய்களுக்கு ஆதரவான பேச்சு சர்ச்சை ஆன நிலையில், நடிகர் படவா கோபி மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
டெல்லியில் தெருநாய் பிரச்னை பூதாகாரமாகக் கிளம்பிய நிலையில், அதுகுறித்து உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து, தெருநாய்களைத் தெருக்களை விட்டு அப்புறப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. அதற்கு விலங்கி்ன ஆர்வலர்கள் தரப்பிலிருந்து பல தரப்பட்ட எதிர்ப்புகள் கிளம்பின. தமிழ்நாட்டிலும் பலர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தெருநாய்கள் ஒரு சமூக பிரச்னையா? அவற்றை ஆதரிக்க வேண்டுமா? என்ற தலைப்பில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நகைச்சுவை நடிகரான படவா கோபி, சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பேசினார்.
நிகழ்ச்சியில் தெருநாய்களை ஆதரிக்கும் தரப்பில் பேசிய படவா கோபி, “இரவு 9 மணிக்கு மேல் தெரியாத தெருக்களுக்குள் நீங்கள் ஏன் போக வேண்டும்? அப்படிப் போனால் அந்தத் தெருவில் உள்ள நாய்கள் நிச்சயம் துரத்தவோ கடிக்கவோ வரும்” என்று அவர் பேசினார். அவருடைய இக்கருத்து,
சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் அவருக்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், படவா கோபி வீடியோ ஒன்றை வெளியிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார்.
தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் படவா கோபி பகிர்ந்திருக்கும் வீடியோவில், ”தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தான் பேசியதை முழுவதும் அவர்கள் வெளியிடவில்லை. டிஆர்பிக்காக எடிட் செய்யப்பட்ட காட்சிகளையே வெளியிட்டுள்ளனர். என் பேச்சு திரிக்கப்பட்டு வெளியாகி இருப்பதால் மன உளைச்சலில் உள்ளேன்.” என்று கூறியுள்ளார். மேலும், நாய்களுக்கு ஆதரவான தரப்பு மற்றும் எதிரான தரப்பு என்று இரண்டு பிரிவை நேருக்கு நேர் அமர வைத்து இந்நிகழ்ச்சி வன்முறையை தூண்டுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ள படவா கோபி, தம்முடைய கருத்து யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னித்து விடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.