கோவாவில் நடைபெறும் 55-வது சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இணையத் தொடருக்கு தமிழில் வெளியான அயலி இணையத் தொடர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 55-வது சர்வதேச திரைப்பட விழா நவம்பர் 20 முதல் நவம்பர் 28 வரை கோவாவில் நடைபெறுகிறது. இந்த விழாவில் சிறந்த இணையத் தொடருக்கான விருதுக்கு 5 இணையத் தொடர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதில் தமிழில் வெளியான அயலி இணையத் தொடரும் இடம்பெற்றுள்ளது.
இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில் கடந்தாண்டு ஜனவரி 26 அன்று ஸீ5 ஓடிடி தளத்தில் வெளியானது அயலி. பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக எடுக்கப்பட்ட இந்த இணையத் தொடர் வெளியானபோது, விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது 55-வது சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இணையத் தொடர் விருதுக்கு அயலி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கோடா ஃபேக்டரி, காலா பாணி, லம்பன், ஜூப்லி ஆகிய இணையத் தொடர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
வெற்றி பெறும் இணையத் தொடரின் தயாரிப்பாளர், கிரியேட்டர், இயக்குனர் ஆகியோர் கௌரவிக்கப்படுவார்கள். இணையத் தொடர் வெளியான ஓடிடி தளமும் அங்கீகரிக்கப்படும். வெற்றியாளர்களுக்கு ரூ 10 லட்சம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.