இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் அயலான். இப்படத்தின் டிரைலர் ஜன. 5 அன்று வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அயலான், மெரி கிறிஸ்துமஸ், லால் சலாம், மிஷன் பாகம்-1 போன்ற தமிழ் படங்கள் வெளியாகவுள்ளது. இந்நிலையில் அயலான் படத்தின் ரிலீஸுக்கு முன்பு நடந்த ஒரு விழாவில், படத்தின் தயாரிப்பாளரான கோட்டப்பாடி. ஜே. ராஜேஷ் பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அயலான் படம் குறித்து அவர் பேசியதாவது: "நிச்சயமாக இது அயலான் பொங்கலாக இருக்கும். தெலுங்கு திரையுலகிற்கு எப்படி பாகுபலி படம் ஒரு அடையாளமாக அமைந்ததோ, அதே போல தமிழ் திரையுலகிற்கு அயலான் படம் அமையும். அனைவரும் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து கேட்டுக்கொண்டே இருந்தனர், அதற்கு தற்போது முடிவு கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவின் திறனை மக்களுக்கு உணர்த்த இது ஒரு சிறந்த வாய்ப்பு. அதே தினத்தில் வெளிவரும் மற்ற படங்களையும் அனைவரும் பார்க்க வேண்டும்" என்றார்.
அயலான் திரைப்படத்தின் பணிகள் கடந்த 2016-ல் தொடங்கியது. இப்படம் வெளிவருவதில் பல சிக்கல்கள் இருந்த நிலையில், ஜனவரி 12 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் போன்ற பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் வரும் ஏலியன் கதாபாத்திரத்திற்கு சித்தார்த் குரல் கொடுத்துள்ளார்.