அஜித்துடன் நிச்சயமாக போட்டி கிடையாது என்று நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான பாலா இயக்கி வரும் படம் ‘வணங்கான்’. இப்படத்தில் அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் போன்ற பலரும் நடிக்கின்றனர். இசை - ஜி.வி. பிரகாஷ்.
இப்படத்தின் டிரைலர் கடந்த ஜூலை மாதத்தில் வெளியாகி கவனத்தை பெற்றது.
இந்நிலையில் இன்று, அருண் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு வணங்கான் படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு, இப்படம் 2025 பொங்கல் பண்டிகை அன்று வெளியாகும் என்று அறிவித்துள்ளது.
முன்னதாக, அஜித்தின் குட் பேட் அக்லி படமும் 2025 பொங்கல் பண்டிகை அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அருண் விஜயிடம், “பொங்கல் தினத்தில் அஜித் படம் வெளியாகிறது. அஜித்துடன் போட்டியா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அருண் விஜய், “அஜித் உச்சத்தில் இருக்கிறார். அவருக்கு யாரும் போட்டி கிடையாது. அஜித்தின் ரசிகர்கள் என்னை நேசிக்கிறார்கள். எனவே அவருடன் நிச்சயமாக போட்டி கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.