நாம் ஆசைப்பட்டது போல் ஒரு சமூகம் அமைவது மிகவும் கடினம் என்று பா. இரஞ்சித் பேசியுள்ளார்.
இசைக் கலைஞர் தெருக்குரல் அறிவு உருவாக்கிய ‘வள்ளியம்மா பேராண்டி’ என்ற ஆல்பம் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் 12 பாடல்களை உருவாக்கி உள்ளார் அறிவு.
ஆல்பம் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநர் பா. இரஞ்சித் ‘எஞ்சாய் எஞ்சாமி’ பாடலால் ஏற்பட்ட சர்ச்சைக்கான பதில் தான் ‘வள்ளியம்மா பேராண்டி’ என்று பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது:
“அறிவின் எழுத்து மிகப்பெரியத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எஞ்சாய் எஞ்சாமி பாடலுக்குப் பிறகு அறிவுக்கு நிறைய பிரச்னைகள் வந்தன. அதனால் அவர் மிகவும் பாதிக்கப்பட்டார். மன உளைச்சலுக்கு ஆளானார். அதற்கான பதிலடிதான் இந்த 12 பாடல்கள்.
அவர் மிகவும் உணர்ச்சிவசமானவர். ஒரு குழந்தையைப் போல அவரை அவ்வப்போது நாம் சமாதானம் செய்ய வேண்டும். சமூகத்தில் நிறைய பிரச்னைகள் உள்ளது. நாம் ஆசைப்பட்டது போல ஒரு சமூகம் அமைவது கடினம். 12 பாடல்களை இவர் எப்படி உருவாக்கினார் என்று ஆச்சரியப்பட்டேன். அவரால் பாடல்களுக்கு இசையமைக்கவும் முடியும் என்பதை நிரூபித்துள்ளார். இந்த ஆல்பத்துக்கான மொத்த வேலைகளையும் அவர் தனியாக சமாளித்தார்” என்றார்.