ANI
சினிமா

ஏ.ஆர். ரஹ்மானைப் பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவிப்பு

இந்த அறிவிப்பின் மூலம் இருவருடைய 29 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

கிழக்கு நியூஸ்

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானைப் பிரிவதாக அவருடைய மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின் மூலம் இருவருடைய 29 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

இதுதொடர்பாக சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"திருமணமாகி இவ்வளவு ஆண்டுகள் ஆன பிறகு, கணவர் ஏ.ஆர். ரஹ்மானைவிட்டுப் பிரிவதாகக் கடினமான முடிவை சாய்ரா பானு எடுத்துள்ளார். அவர்களுடைய உறவில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க உணர்ச்சி மிகுந்த சிரமங்களுக்குப் பிறகு அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஆழமான அன்பை வைத்திருந்தாலும், பிரச்னைகளும் சிரமங்களும் தீர்க்க முடியாத ஓர் இடைவெளியை உண்டாக்கிவிட்டது. தற்போதைய நிலையில் இதை யார் நினைத்தாலும் சரி செய்ய முடியாது என்கிற நிலையை அடைந்திருப்பதாக உணர்கிறார்கள். மிகுந்த வலியுடனும் வேதனையுடனும் இந்த முடிவை எடுத்திருப்பதாக சாய்ரா பானு தெரிவித்துள்ளார். சவாலான இந்தத் தருணத்தில் அனைவரும் இதைப் புரிந்துகொண்டு தனியுரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என சாய்ரா பானு கேட்டுக்கொண்டுள்ளார்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர். ரஹ்மான், சாய்ரா பானுவுக்கு 1995-ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கதீஜா, ரஹீமா என இரு மகள்களும் அமீன் என்ற மகனும் உள்ளார்கள். கதீஜாவுக்கு கடந்த 2022-ல் திருமணம் நடைபெற்றது.